“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” என்ற தொனிப்பொருளில் வான்எல – கிண்ணியா விவசாய அமைப்புகள் சம்மேளனத்தினால் 11 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று (01) திருகோணமலை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது விவசாய நிலங்களை தமக்கு வழங்கக் கோரியும், நிறுத்தப்பட்டுள்ள மானியப் பசளையை வழங்குமாறு கோரியும் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 5 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 6 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகளுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியபோது நிறுத்தப்பட்டுள்ள மானியப் பசளையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த காணிப் பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாகவும் ஆளுநர் உறுதி அளித்ததாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
1973ஆம் ஆண்டில் இருந்து குறித்த காணிகளில் தாம் விவசாயம் செய்துவந்த நிலையில் யுத்தம் நிலவிய காலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. பின்னர் 2010ஆம் ஆண்டில் இருந்து அப்பகுதியில் உள்ள 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் தொடர்ச்சியாக விவசாயம் செய்து வருவதாகவும் இதற்காக அரசாங்கத்தினால் மானியப்பசளை வழங்கப்பட்டு வந்ததாகவும் இம்முறை குறித்த மானியப்பசளை நிறுத்தப்பட்டுள்ளமையினால் பயிராக இருக்கின்ற வேளான்மை அழிவடையும் நிலையில் இருப்பதாகவும் குறிப்பாக 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சில பண்ணையாளர்கள் தங்களுக்கான மேய்ச்சல் தரையினை கோரி நீதிமன்றம் சென்ற நிலையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியின் எல்லைகள் சரியாக குறிப்பிடப்படாத நிலையில் இவ்வாறான குழப்ப நிலை தோன்றியுள்ளதாக தெரிய வருகின்றது. இது தொடர்பில் ஆராய எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒரு குழுவினர் திருகோணமலைக்கு வரவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.