வாகன விலைகளில் வீழ்ச்சி…

ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் விற்கப்படும் வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 15 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் உள்ளூர் சந்தையில் பதிவு செய்யப்படாத வாகனங்களின் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மெரின்சிகே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி தரவுகளின்படி, 2025 ஜனவரி மற்றும் ஆகஸ்ட்டுக்கு இடையில் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் விலை மாற்றங்களின் பின்னர், பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் இசட் ப்ளே 2025 எஸ்யூவி இப்போது 23.5 மில்லியன் ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது, இது 25.5 மில்லியனில் இருந்து குறைந்துள்ளது.

டொயோட்டா யாரிஸ் 11.5 மில்லியனில் இருந்து 10.5 மில்லியன் ரூபாய்களா குறைந்துள்ளது அதே நேரத்தில் சுசுகி அல்டோ ஹைப்ரிட் இப்போது 7.9 மில்லியனில் இருந்து 7.3 மில்லியனாகக் குறைந்துள்ளது. சுசுகி வேகன் ஆர் விலையும் 7.8 மில்லியனில் இருந்து 7.3 மில்லியன் ரூபாய்களாக குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறக்குமதி செய்யப்பட்ட வாகன சந்தையில் டொயோட்டா முன்னணி பிராண்டாக உருவெடுத்துள்ளது, ரேய்ஸ் மற்றும் யாரிஸ் மொடல்கள் விற்பனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்பதை மெரின்சிகே எடுத்துரைத்தார்.

SUV பிரிவில் எல்சி300 மற்றும் பிராடோ முன்னிலை வகிக்கின்றன, அதே நேரத்தில் டொயோட்டா டபுள் கேப் மற்றும் ஃபோர்ட் ராப்டர் மூன்றாவது மிகவும் பிரபலமான வாகனங்களாக இடம்பிடித்துள்ளன.

சிறிய வாகனப் பிரிவில் நிசான் நிறுவனம் பிரபலமடைந்துள்ளதாகவும், ஆனால் மொடல் புதுப்பிப்புகள் இல்லாததால் சுசுகி வேகன் ஆர் விற்பனை குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மின்சார வாகன இறக்குமதியில் தொடர்ந்து வரும் கட்டுப்பாடுகளால் தேவை அதிகரித்து வருவதால், ஹோண்டா வெசல் தற்போது எஸ்யூவிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.