இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உங்களால் ஆரம்பிக்கபட்டிருக்கும் நிலையில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடிய வகையில் வலுவானதொரு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு வரவேற்கத்தக்கது எனினும், அத்தகைய கட்டமைப்பொன்றை ஸ்தாபித்து, அதனை முழுமையாக இயங்கச்செய்வதற்கு மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம்.
அதுமாத்திரமன்றி அதனைச் செய்வதற்கான போதுமான அரசியல் தன்முனைப்பு வெளிக்காட்டப்படவேண்டும். அத்தோடு சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனக் கூறுவது மாத்திரம் போதுமானதன்று. மாறாக அதுகுறித்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இதுவரையில் குறைந்தபட்சம் சுமார் 10 வெவ்வேறு ஆணைக்குழுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் கூட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் உள்ளகப்பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட தரப்பினரும், அவர்களது குடும்பத்தினரும், இழப்புக்களுக்கு முகங்கொடுத்த சமூகத்தினரும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப்பேணி வந்திருக்கிறார்கள்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் எவையும் அடையப்படாத நிலையில், இம்முன்மொழிவு மீண்டுமொரு தோல்விக்கே வழிவகுக்கும்.
அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு என்பன நம்பத்தகுந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு மிக அவசியமானவையாகும். எனினும் அவரை தற்போது நடைமுறையில் இல்லை.
மாறாக நீதியைக்கோரிப் போராடுபவர்கள் அரசாங்கத்தினதும், பாதுகாப்புத்தரப்பினரதும் தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றனர். எனவே 2015 ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட செயற்திறன்மிக்க சர்வதேச பங்கேற்பின்றி, தனித்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தமுடியாது.
கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கடந்தகால மீறல்கள் தொடர்பிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் ஊடாகக் கண்டறியப்பட்டன.
இருப்பினும் உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்கான நம்பத்தன்மையை சிறுபான்மையின மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தவறிவிட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.