அரசின் பயங்கரவாத அட்டூழியத்தை அனைவரும் எதிர்க்கவேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி. அழைப்பு!

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் இருப்பை அழிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தமிழ்பேசும் மக்களாக நாமனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசு தேர்தலுக்கு முன்னர் மக்களின் வாக்கைப்பெறுவதற்காக மக்களுக்கு நன்மை பயக்கும் விதமான வாக்குறுதிகளை வழங்கிவிட்டுத் தற்போது அதற்கு முற்றுமுழுதாக நேர்மாறாகச் செயற்பட்டுவருகின்றது. மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அரசின் செயற்பாடுகள் ஊடாக இந்த விடயம் தெளிவாகப் புலப்படுகிறது.

நாம் மன்னாரில் காறாலை மற்றும் கனிய மணல் அகழ்வுத் திட்டத்துக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மக்களுக்கும் எங்கள் பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றோம். மன்னார்த் தீவைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் எடுக்கவிருக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எங்கள் நிபந்தனையில்லாத ஆதரவை வழங்க தயாராகவிருக்கின்றோம்- என்றார்.