ஈழத்தமிழரின் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் குடையமைப்புச் சாத்தியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 209

ஈழத்தமிழரின் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே
ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் குடையமைப்புச் சாத்தியம்

சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வடக்குக் குறித்துப் பேசவாருங்கள் என விடுத்த அழைப்பானது ராசபக்சாக்களின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கொள்கையான இலங்கையில் இனரீதியிலான பிரச்சினை என்று எதுவுமேயில்லை, வடக்கும் கிழக்கும் தனித்தனியான பிராந்தியங்களாக சிறிலங்காவின் நிர்வாகத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய பிராந்தியங்களே என்ற இனவெறி மதவெறிக் கோட்பாட்டை மீள் உறுதி செய்துள்ளது. முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சியிலும் “பிராந்தியங்களின் ஒன்றியமாக” சிறிலங்காவை அரசியலமைப்பு வழி மாற்ற முயன்றார். வடக்கு கிழக்கைத் தனித்தனியான பிராந்தியங்களாகவே அடையாளப்படுத்தவே இவரும் முனைந்தார். இவ்விடயத்தில் ரணில் மட்டுமல்ல சிங்களக் கட்சிகள் எல்லாமே தங்களுக்கு இடையில் உள்ள பதவிப்போட்டிகளை எல்லாமே ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய அரசியலமைப்பின் மூலம் ஈழத்தமிழரின் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட ஈழத்தமிழர்களின் இறைமையை இல்லாதொழிப்பதில் ஒரே நோக்குள்ளவர்களாகவே, இன்றைய மீள முடியாத சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி நிலையிலும் செயற்படுகின்றனர்.
‘பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் சனநாயகம்’ என்ற பெயரில், நாட்டின் 61.1 வீதமான மக்கள் உணவுத்தட்டுப்பாட்டுக்குள் சிக்குண்ட நிலையில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 35 வீதத்தை நாற்பத்தோராயிரம் கோடி ரூபாக்களை பாதுகாப்புச் செலவுக்கு ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. பிரான்சை விட ஐக்கிய இராச்சியத்தை விட அதிகளவிலான இராணுவத்தை சிறிலங்கா வைத்திருக்க முயல்வது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு எவ்வகையில் உதவும் என்கிற கேள்வியைச் சிங்கள ஆய்வாளர்களே எழுப்பியுள்ளனர். இந்துமாக்கடல் இன்று ஆதிக்கப்போட்டிகளுக்கு உள்ளாகும் சூழ்நிலை வலுவாகி வருவதால் கடற்படை வான்படைகளை நவீனப்படுத்துவது சிறிலங்காவின் பாதுகாப்புக்கு உடனடித் தேவையாக உள்ளதென ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்றத்துக்கு வெளியே கொத்தலாவலைப் பாதுகாப்புப் பல்கலைக்கழக உரையொன்றில் பாதுகாப்புச் செலவீனத்தை நியாயப்படுத்தினாலும் நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் இறைமையை ஒடுக்குவதற்கான நோக்கிலேயே இந்த படைகளின் நவீனப்படுத்தல் முன்னெடுக்கப்படுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிறிலங்கா பணி ஓய்வு பெற்ற படையினருக்கு பில்லியன் கணக்கில் ஓய்வூதியம் வழங்கி வருவது ஒன்றே எவ்வகையில் இலங்கையின் பொருளாதாரம் சீரழிகிறது என்பதை உறுதிப்படுத்தும்.
இந்துமாக்கடலில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக ஈழத்தமிழர்களின் மேலாண்மை தொடர்ந்து வந்திருப்பது வரலாறாக உள்ளது. தமிழீழ மக்களின் நடைமுறை அரசு வழி அவர்களின் தேச உருவாக்கம் நடைபெற்ற 1978 முதல் 2009 வரையான 31 ஆண்ட காலத்தில் இலங்கையை அடுத்த இந்துமாக்கடல் ஆதிக்கப்போட்டி இல்லாது இருந்தது. இந்நிலை மகிந்த ராசபக்சாவின் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்குப் பின்னான ஆட்சியில் மாறியது. இது சீன இந்திய பனிப்போருடன் கூடிய அமெரிக்க ஆதிக்கப் போட்டித்தளமாக இன்று இலங்கையைக் காட்சியளிக்க வைத்துள்ளது. சீனாவின் பொருளாதார திட்டங்கள் உதவிகள் என்னும் அதன் வடக்கு கிழக்கு நோக்கிய இந்தியா மேலான புலனாய்வு நோக்கிலான சமகாலநகர்வுகள், இந்தியாவை ‘ரைட்ஸ்’ அமைப்பின் வழி வடக்கு கிழக்கு உட்பட்ட இலங்கையின் புகையிரத, துறைமுக வளர்ச்சிக்கு, உதவுதல் என்கிற செயற்திட்டத்தின் வழி இலங்கையில் மேலும் பலமாகக் காலூன்ற வைத்துள்ளது. இந்தியா ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமைத்துவத்தையும், சீனாவின் பொருளாதார அமைப்பின் தலமைத்துவத்தையும் ஒரே காலத்தில் ஏற்றிருப்பது உலகில் பொதுவாகவும் தெற்காசிய விவகாரங்களில் சிறப்பாகவும் மத்தியத்தங்களை மேற்கொள்வதற்கான பலத்தை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இதனால் இலங்கை இனப்பிரச்சினை விடயத்திலும் இந்தியா தன் சார்பான தீர்வுகளை முன்னெடுக்க முயற்சிக்கும் என்பது வெளிப்படை. தான் நிழலாக நின்று கொண்டு நோர்வே போன்ற அமெரிக்காவுடன் நல்லுறவுகள் உள்ள நாடுகள் வழியாக அதனை மேற்கொள்வதற்கும் இடமுண்டு. இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் ஜேக்கப் பிரைடன்லண்ட் இலங்கையில் இருதரப்பும் அழைத்தால் நோர்வே மீண்டும் இலங்கை இனப்பிரச்சினையில் மத்தியத்தம் வகிக்க தயாராக உள்ளது என இந்தியாவின் இந்து ஆங்கில நாளிதழுக்கு கூறியுள்ளமை அனைத்துலக மட்டத்தில் இலங்கையினப் பிரச்சினை குறித்த தீர்வுக்கான காய்நகர்த்தல்கள் இடம்பெற்று வருவதை உறுதி செய்துள்ளது.
இவ்வாறாக ஒரு பேச்சுவார்த்தை அனைத்துலக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பம் வந்தால் யார் ஈழத்தமிழர்க்கான கட்சியாகப் பேச்சுக்களில் ஈடுபடக் கூடிய தகுதியுள்ள நிலையில் உள்ளனர் என்ற கேள்வி ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் குடைநிழல் அமைப்பொன்று; உடன் தேவை என்ற விடைக்கு இட்டுச் செல்கிறது.
மேலும் சிறிலங்காவின் துறைமுகங்கள் விமானசேவைகள் இராஜங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பலாலி அனைத்துலக விமான நிலைய வேலைகளும் காங்கேசன்துறை துறைமுக மேம்பாட்டு வேலைகளும் இந்தியாவின் ஆதரவுடன் ஒருசில மாதங்களுக்குள் நிறைவுபட்டு காங்கேசன் துறை மூன்றின மக்களுக்கும் உரிய பொருளாதார வாழ்வுக்கான இடமாக மாறும் என யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இது சிறிலங்கா பொருளாதாரத்துக்கான வளர்ச்சி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதிகளில் ஈழத்தமிழர்களின் மக்கள் தொகையை ஐதாக்கும் செயற்திட்டததை வெற்றிகரமாக முன்னெடுக்கப் போகின்றது என்பதை உறுதிப்படுத்தகிறது. இப்படியான சூழலில் ஈழத்தமிழரின் இறைமையினை மீள்நிலைநிறுத்தக் கூடிய ஒரு குடைநிழல் அமைப்பு உடனடியாக உருவாக்கப்படல் அவசியம் என்பது இலக்கின் எண்ணம். அரசியல் அதிகாரப் பகிர்வு அல்ல தமது அரசியல் அதிகாரத்தில் பகிர்வு என்பதே ரணிலின் இலக்கு. இந்நேரத்தில் குடைநிழல் அமைப்பு ஒன்று ஈழத்தமிழரின் இறைமையை உறுதிப்படுத்தலைப் பொதுக்கொள்கையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலே அது மாவீர்களால் உறுதி செய்யப்பட்ட மண்ணினதும் மக்களினதும் பாதுகாப்பை முன்னெடுக்கும் ஆற்றலுள்ளதாக அமையும் என்பது மாவீரர் வாரத்தில் இலக்கின் உறுதியான எண்ணம். இன்று கூட்டு சேர்வதில் தடுமாறும் தமிழ் அரசியல் கட்சிகள் ஈழமக்களின் இறைமை முன்னிறுத்தினாலே இணைப்பு நடைமுறைச் சாத்தியமாகும் என்பதையும் இலக்கு இடித்துக்கூற விரும்புகிறது.

Tamil News