இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர் குறித்த அவலங்களை மையப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஒரு விசேட செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரின் போது காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான வலிந்து காணாமல் போன சம்பவங்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளன. 1980கள் முதல் குறைந்தது ஒரு லட்சம் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என சர்வதேச மன்னிப்புச் சபை மதிப்பிட்டுள்ளதாக குறித்த அவுஸ்திரேலிய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அர்த்தமுள்ள பதில்களை அரிதாகவே வழங்கியதால், காணாமல் போனவர்களின் உறவுகள் குழப்பத்திலும் துயரத்திலும் மூழ்கியுள்ளன.
சமீபத்திய நிகழ்வாக, கடந்த நான்கு மாதங்களாக, யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான செம்மணியில் அகழ்வாய்வாளர்கள் இதுவரை 240 மனித என்புக்கூடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றுள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் என்புக்கூடுகளும் அடங்கியுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செம்மணிக் கண்டுபிடிப்பு, இலங்கையில் வலிந்து காணாமல் போனவர்கள் குறித்து சர்வதேச விசாரணைகளுக்கான புதிய கோரிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிப்புகள், தோல்வியடைந்த பொறுப்புக்கூறல் மற்றும் தீர்க்கப்படாத சோகத்தின் கதையைத் தொடர்வதாக உள்ளது என்றும் அந்த செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஊடகத்துக்கு கருத்துரைத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், மனிதப் புதைகுழிகளை முறையாக விசாரித்து குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரத் தேவையான தடயவியல் வளங்கள் மற்றும் சட்ட கட்டமைப்புகள் இலங்கையில் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் குவாத்தமாலா மற்றும் அர்ஜென்டினா போன்ற பிற நாடுகளில் மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்வதிலிருந்து பெறப்பட்ட தடயவியல் மானுடவியலில் நிபுணத்துவத்தை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
குவாத்தமாலாவில் உள்நாட்டுப் போரின் போது சுமார் 2 லட்சம் மாயா பழங்குடி மக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.