வலுசக்தி அமைச்சர் ஊழல் நோக்கத்தில் நிலக்கரி விடயத்தில் செயற்பட்டார் என்று எங்கேயும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஊழல் நோக்கத்தில் இது நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்பதை மக்களுக்கு உறுதியளிக்கின்றோம்.
எவ்வாறாயினும் ஊழல் முறைமையை சீர்செய்து முன்நோக்கிச் செல்லவே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. விசாரணைகளில் வெளிவரும் விடயங்களுக்கு அமைய நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து எதிர்க்கட்சியினர் அவர்களை போன்று எமது அரசாங்கத்தையும் ஊழல் மிக்கது என்று காட்டும் நோக்கத்திலேயே செயற்படுகின்றனர். எதிர்க்கட்சிக்கென பணிகள் உள்ளன. அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாகவும். இதன்மூலம் ஊழல்களை வெளிக்கொண்டுவரக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் ஊழலுக்கு எதிரான ஆட்சியின் போது அவர்களின் ஊழல்களை மூடி மறைப்பதற்காக ஏதாவது கதைகளை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாக இருக்கக்கூடாது.
அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றது என்று காட்ட முயற்சிக்கும் பிரதான தரப்பினர் யாரென்று ஆராய்ந்தால் அவர்களின் உண்மை நோக்கத்தை புரிந்துகொள்ள முடியும். கடந்த பல வருடங்களில் நாட்டில் இடம்பெற்ற ஊழல்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட மற்றும் அந்த ஊழல்களை பாதுகாக்க முயற்சித்தவர்களே இப்போது அதிகளவில் பேசுகிறார்கள். ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
நாட்டை பெற்றுக்கொள்ளும் போது ஊழல் பொறிமுறைகளுடனான முறைமையையே பொறுப்பேற்றோம். இவற்றை சீர் செய்யவே எமது அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலக்கரி தொடர்பான விவாதமும் மிகவும் முக்கியமானது. இந்த செயற்பாடுகளில் வெளியாகும் தகவல்கள் மிகவும் முக்கியமானது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கணக்காய்வு விசாரணைகள் உள்ளிட்ட விடயங்களில் மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை பலப்படுத்தி பயணிக்க முடியும். என்ன நடந்தது என்று ஆராய்வதற்கு இது மிகவும் முக்கியமானது. ஆனால் எதிர்க்கட்சியானது அரசாங்கம் ஊழல் மிக்கது என்று காட்டி தமது ஊழல்களை மூடி மறைக்கவே முயற்சிக்கின்றது.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இந்த அமைச்சர் ஊழல் நோக்கத்தில் நிலக்கரி விடயத்தில் செயற்பட்டார் என்று எங்கேயும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆதாரங்களுடன் அதை கூறவில்லை. ஊழல் நோக்கத்தில் இது நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்பதனை மக்களுக்கு உறுதியளிக்கின்றோம். எவ்வாறாயினும் ஊழல் முறைமையை சீர்செய்து முன்நோக்கிச் செல்லவே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. விசாரணைகளில் வெளிவரும் விடயங்களுக்கு அமைய நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.



