எரிசக்தி நெருக்கடி: ஜனாதிபதி, கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய வலுசக்தி நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழ்நிலையால் உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கமளித்தார். இந்த நெருக்கடி இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய நேரடித் தாக்கங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள அவசர நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியமானது என்பதை அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த முக்கியத்துவமிக்க சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் தற்போதைய சூழல் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்துத் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டனர்.

மத்திய கிழக்கு மோதல்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.