வெற்று வார்த்தை ஜாலங்கள் தீர்வைத் தராது :சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ உத்தியோகத்தர் நியமனங்கள் மற்றும் வடக்கு விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் ஜனநாயக விரோதமானவை என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இது குறித்து தெரிவித்துள்ளார்.

கிராம மட்டத்தில் ஏற்கனவே கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் என மூன்று அரச அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில், ‘பிரஜாசக்தி’ என்ற பெயரில் நான்காவதாக ஒருவரை நியமிப்பது தேவையற்றது என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

திறமைக்கே முன்னுரிமை அளிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி – என்.பி.பி அரசாங்கம், எந்தவித கல்வித் தகுதியோ நேர்முகப் பரீட்சையோ இன்றி வெறும் கட்சி உறுப்பினர்களை மட்டும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டி, கிராமப்புறங்களில் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தச் சட்டவிரோத நியமனங்கள் வழங்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாணத்திற்குப் பொங்கல் விழாவிற்காக வருகை தந்த ஜனாதிபதி, தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தில் நடந்த போராட்டங்களைக் கொச்சைப்படுத்தியதை சுரேஷ் பிரேமச்சந்திரன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மக்களின் காணிகளைப் படைகள் மூலம் அடாத்தாகப் பிடித்து விகாரை கட்டுவது ஜனாதிபதிக்கு இனவாதமாகத் தெரியவில்லை. ஆனால், பறிகொடுத்த காணியைக் கேட்டுப் போராடும் மக்களை இனவாதிகள் என அவர் நக்கல் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதக் காணி ஆக்கிரமிப்புகளுக்கு இந்த அரசாங்கத்தாலும் நீதியான தீர்வை வழங்க முடியாது என்பது ஜனாதிபதியின் பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெற்று வார்த்தை ஜாலங்கள் ஒருபோதும் இனப் பிரச்சினைக்கோ அல்லது மக்கள் பிரச்சினைகளுக்கோ தீர்வைத் தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், நடைமுறையில் சட்டம், ஒழுங்கு, நீதி மற்றும் நியாயம் நிலைநாட்டப்படுவதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனத் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.