உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கம் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 383

இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல் சிறிலங்கா வரை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கான செயல்நடவடிக்கைகளாக வல்லாண்மை பிராந்திய மேலாண்மை அரசுபயங்கரவாதச் செயற்பாடுகளை இனங்கண்டு மக்களுடைய இறை மைக்கான பாதுகாப்பை தேசியத்துக்கான உறுதிப்பாட்டை முன்னெடுக்கக் கூடிய தலை மைகளை கொன்றழிக்கும் அதே நேரத்தில் மக்களின் இறைமைப்பாதுகாப்புக்கும் தேசிய உறுதிப்பாட்டுக்குமான தேசநிர்மாணத்தை மீண்டெழாதவாறு அத்தகைய மக்களின் உட்கட்டுமானங்களை அவை உலகப் பொருளாதாரத்திற்கு உலக அமைதிக்கு அளித்து வரும் பங்களிப்புகளைக்கூட கவனத்தில் எடுக்காது எந்த அளவுக்கு அழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அழித்தொழிப்பதும், இதற்கான அனைத்துலக கூட்டாண்மைகளையும் பங்காண்மைகளையும் நவீன போர்க்கருவிகளையும் செயற்கை நுண்ணறிவு முறைமை தீர்மானம் எடுத்தல்களையும் வேகப்படுத்தி இத்தகைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கொண்ட வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகளின் அரசியல் தலைமையை அந்த நாட்டு மக்களின் விருப்புப் பெறப்படாமலே சட்டரீதியான செயற் பாடின்றியே தன்னிச்சையாக முடிவெடுக்கும் உலக சர்வாதிகாரிகளாக வெளிப்படுவதற்கு, அந்த நாடுகளில் உள்ள ஆட்சி முறைமையையும் சட்டமுறைமையையும் மட்டுமல்ல அனைத்துலக ஆட்சி முறைமைகள் வழமைகள் ஒழுங்குமுறைமைகளையும் அனைத்துலக சட்ட முறைமைகள் நீதி முறைமைகளையும் அனைத்துலக அரசியல் ஒழுங்கமைப்பையும் பொருட்படுத்தாது ஆயுதபலத்தால் இனங்காணக்கூடிய அச்சத்தை உருவாக்கி உலக மக்களை அடிமைப்படுத்துவது என்பதே இன்றைய சமகால அரசியலாக உள்ளது.
இதற்கான இவ்வார எடுத்துக்காட்டுகளாக ஈரானில் அமெரிக்கா – இஸ்ரேல் நடாத்தும் எந்த நியாயப்படுத்தலும் இல்லாத உலக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முயற்சிகளும் உலகப் பொருளாதாரத்தை முடக்குவதன் மூலம் உலகின் அரசியலின் பன்முனைவாக்கத்தை மீளவும் அமெரிக்கா சார்ந்த ஒரு முனைவாக்கமாகவும் இஸ்ரேல் சார்ந்த ஒரு ஆயுதப்பலமாகவும் நிலைப்படுத்தும் மனிதநாகரிகத்துக்கும் மனிதாயத்துக்கும் எதிரான போர்ச்செயற்பாடுகள் அமைகின்றன.
அவ்வாறே 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் பின்னர் இதுவரை “மக்கள் மேலான போரை” பனிப்போராக ஈழத்தமிழர்கள் மேல் இன்று வரை 17 ஆண்டுகளாக நடாத்தி வரும் சிறிலங்கா அரசாங்கம் , இந்த  “மக்கள் மேலான போரின்” தொடர்ச்சியாகக் கடந்த வாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் சனநாயகப் போராட்டத்தினை படைபலத்தைக்கொண்டு அடக்கும் முறைமையிலான சிறிலங்கா பொலிசாரின் செயலாக மாற்றியுள்ளது. யாழ் பல்கலைக்கழக வளாகத்துள் நடந்த பொலிஸாரின் அத்துமீறல் உள் நுழைவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உட்பட அரசியல் விழிப்புணர்வுள்ள மூன்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களை 5மணி நேர விசாரணைக்கு உட்படுத்தியதும், அந்தக்கோர்ப்பினை சட்டமாஅதிபரிடம் மேல்நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளதும் அமைகிறது.
இச்செயற்பாடு ஈழத்தமிழ் இளையோரிடையே உணர்ச்சியைத் தூண்டி அவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காகவும் செயற்பட முற்படுகையில் அவர்கள் சிறிலங்காவின் ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் எதிராகச் செயற்படுகின்றார்களென சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6வது திருத்தத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்களாக சந்தேகத்துக்குள்ளாக்கி,  அனைத்துலக சட்டங்களுக்கு அமையாத வகையில் 1979 முதல் இன்று வரை 47 ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி வரும் சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவர்களின் வாழ்வை முடக்கிவிட இன்றைய சிறிலங்கா அரசாங்கமும் முயற்சித்துள்ளது.
இந்த இனங்காணக்கூடிய அச்சுறுத்தல் வழி அரசியல் விழிப்புணர்வுள்ள மற்றைய ஈழத்தமிழ் இளைஞர்களின் சனநாயகப் போராட்ட உரிமைகளையும் அடக்கி ஒடுக்கும் செயலாக இது உள்ளது. இதனை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்ழகச் சமூகமுமே சனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை சிறிலங்காவின்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி  அவர்களும் சிறீலங்காவில் இனவாதத்திற்கு இனி இடமில்லையென்னும் அரசத்தலைவர் அநுரா அவர்களும் எந்த அளவுக்கு நீதியின் அடிப்படையில் அணுகுவார்கள் என்பதிலேயே அவர்கள் உருவாக்கி வருவதாகக் கூறும் “மாற்றம்” என்பதன் உண்மை நிலையை உலகு கண்டுகொள்ளும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கடந்த வார நிகழ்வு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள்ளேயே பிரதமரதும் அரசத்தலைவரதும் ஆணைக்குக் கட்டுப்படாத மக்கள் விடுதலை முன்னணியின் சக்திகள் மேலோங்கி வருகின்றனவா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. அவ்வாறாயின் அதே மக்கள் விடுதலை முன்னணியினரின் செயற்பாடாக “ஏக்கிய ராஜ்யத்தை” விட மிகமோசமான சிங்கள இனத்தின் நாடு சிங்கள மொழிக்குரிய நாடு பௌத்த ஆகம சட்டங்களுக்கு உரிய நாடு என்பதை நடைமுறைப்படுத்தும் ஆனால் சீனபாணியிலான அரச ஆட்சிமுறைமையை நடைமுறைப்படுத்தலென்றும், நிறைவேற்று அதிகாரமுள்ள அரசத்தலைவர் முறைமைய மாற்றுதல் என்றும் பல மயக்கத் தலைப்புகளில் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பு விரைவில் அமையப்போகிறதா என்கின்ற கேள்வி எழுகிறது.
இதனை உலகப் போர்மேகப் பின்னணியில் அனைத்துலகத் தமிழரின் கண்ணில் மண்ணைத் தூவி தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கிறதா என்பதே இவ்வாரத்தில் இலக்கின் கவனயீர்ப்பாக உள்ளது. இதற்கான அனைத்துலகப் பலத்தை ஒரு சில நாடுகள் சிறிலங்காவின் உள்ளும் ஐக்கிய நாடுகள் சபை மட்டத்திலும் வேகப்படுத்துகின்றனவா என்பதே அடுத்த கேள்வி. ஈழத்தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறிலங்காவின் கஜபாகு கப்பலினை அமெரிக்க விசேட பிரதிநிதி பார்வையிட்டதும் மே 24 இல் பத்து அமெரிக்க நவீன உலங்குவானூர்திகள் சிறிலங்காவின் கடற்படையில் இணைக்கப்படுவதும் இந்த இணைப்பை மூடிமறைக்கக் கூடிய முறையில் சிறிலங்காவின் அரசத்தலைவர் ஈரானும் அமெரிக்காவும் ஒரே நாளில் இலங்கைக் கடற்பரப்புக்குள் வருவதற்கு உதவி கோரிய பொழுதிலும் தாங்கள் அமெரிக்காவை அனுமதிக்காது ஈரானை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் அனுமதித்தார்கள் எனத் தனது உரையில் கூறியுள்ளதும் மிகக்கவனமாக ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார முன்னெச்சரிக்கையாக உள்ளது.

Tamil News