சிங்களவரின் போராட்டத்தை ஒடுக்கவே அவசரகால சட்டம்; கஜேந்திரன்

108 Views

சிங்களவரின் போராட்டத்தை ஒடுக்கவே அவசரகால சட்டம்சிங்களவரின் போராட்டத்தை ஒடுக்கவே அவசரகால சட்டம்: அன்று தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை இப்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித் அவர் மேலும் கூறுகையில்,

எந்தத் தேவையும் இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத காலனித்துவ ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராடும் போது அதனை ஒடுக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 30 ஆண்டுகளாக தமிழர்களை வேட்டையாடியது.

எங்களின் பெண்களை சித்திரவதை செய்வதற்கும், எங்களின் இளைஞர்களை கேட்பாரின்றி கொலை செய்வதற்கும் எங்களது தேசத்தின் செல்வங்களை கொள்ளையடித்து தென்னிலங்கைக்கு கொண்டு வரவும் அந்த அவசரகால சட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஆனால் இன்று சிங்கள மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக இந்த அவசரகால சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இந்தப் போக்கு உங்களை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் குளத்திற்கு கீழ் 178 ஏக்கரில் விவசாய காணி 72 ஆம் ஆண்டு முதல் உறுதிகள் வழங்கப்பட்டு விவசாயிகளினால் விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த விவசாய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பௌத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கும், முல்லைத்தீவு வன இலாக்காவுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

அதேபோன்று மயிலத்தமடுவில் இந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிங்கள மக்கள் வெளியேறுவார்கள் என்று அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவும் அவர்கள் விலகி விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அங்கு மக்களின் மாடு வளர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், மகாவளி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் அந்தக் காரியத்தை செய்கின்றனர். ஆகவே அது உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு செயற்படும் மகாவலி அதிகார சபைக்கு எப்படி உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன உதவிகளை வழங்குகின்றன என்ற கேள்விகளை எழுப்புகின்றேன். அத்துடன் யாழ். மாவட்டத்தில் அரசியல் பழிவாங்கல் தொடர்கின்றது. அங்கு வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கும் போது புள்ளித்திட்டத்தை வழங்கி அதில் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை வழங்க வேண்டும் என்பதே நடைமுறையாகும். இதன்படி செயற்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சரினால் அது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் அவரின் மேல் முறையீடு தொடர்பில் ஆராயாது அந்த உத்தியோகத்தரின் இடமாற்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார். அந்த உத்தியோகத்தர் முறையாக நடந்துகொண்ட போதும் அவரை பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். மாவட்டத்திலும், வட மாகாணத்திலும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இறந்தவர்களின் உடல்கள் வைத்தியசாலைகளில் தேங்குகின்றது. யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலுமே அதனை தகனம் செய்ய முடியும். வட மாகாணத்திற்கு இரண்டு தகனசாலைகளே உள்ளன. இதனால் அநுராதபுரத்திற்கும் பொலனறுவைக்கும் இந்த உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இது உறவினர்களுக்கு விருப்பமில்லை. இதனால் உடனடியாக இந்த உடல்களை அந்த மாவட்டங்களிலேயே எரிப்பதற்கான தகனசாலைகளை அமைக்க வேண்டும். அல்லது விறகுகளை போட்டு அவற்றை எரிப்பதற்காவது நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply