மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறையால் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையக்கூடும் -GMOA

07495bc1ffcbb7ba38f7816e3c36395e XL மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறையால் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையக்கூடும் -GMOA

தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் சுகாதாரத் துறை அடுத்த வாரத்திற்குள் வீழ்ச்சியடையக் கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை அத்தியாவசிய சேவையாக இருப்பதால் அதனை தொடர்ந்து இயங்குவதற்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என GMOA ஊடக குழு உறுப்பினரான வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அவசர நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர்களை பாதித்துள்ளதாக GMOA இன் உப தலைவரான வைத்தியர் சந்திக எபிடகடுவ இதன் போது தெரிவித்தார்.

துப்புரவு பணியாளர்கள் முதல் துணை சேவை வழங்குநர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவர்கள் வரை ஒவ்வொரு பணியாளரும் வேலைக்குச் செல்வதற்கு எரிபொருள் கிடைக்காததால் சுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கிடைக்காததன் காரணமாக சுகாதாரத் திணைக்களப் பணியாளர்கள் பலர் குறித்த நேரத்தில் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை வழங்குநர்கள் பொதுமக்களுக்கான சேவையை முன்னெடுத்துச் செல்வதற்காக மிக விரைவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையை அறிமுகப்படுத்துமாறு அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இல்லாவிட்டால், சுகாதாரத் துறைக்கு விசேட போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.