வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வீழ்ச்சிக்கு இட்டு சென்ற வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர். நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு அரசாங்கம் எந்த தடையும் ஏற்படுத்தவில்லை. கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி, பூரணமாக நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் வழங்கியுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு தரப்பிடம் இருக்கின்ற துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அதேபோல வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



