“ட்ரம்ப்-பூட்டினின் பொய்களை விழுங்குவதே உக்ரேனுக்குக் குண்டுகளை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது” என்ற கருத்தைப் பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான “தி கார்டியன்” இல் அதன் பத்திரிகை எழுத்தாளர் ரபாயேல் பெய்ர் 13/08/2025இல் தனது அரசியல் ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டேர்க்கின் சிறீலங்காவின் மனித உரிமைகள் குறித்த அறிக்கை, “தமிழரசுக் கட்சி சிறீலங்காவின் பொய்களை விழுங்குவதே ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்காவின் இன அழிப்பு என்னும் குண்டை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது” என்று இலக்கை எழுத வைக்கிறது.
சிறீலங்கா முள்ளிவாய்க்காலில் தேசமாகவே ஈழத் தமிழர்களை இன அழிப்பு செய்து, அவர்களின் 31 ஆண்டுகால நடைமுறை அரசை ஆக்கிரமித்ததின் பின்னரான தமிழரசுக் கட்சியின் தலைமை, “சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குத் தொடுப்பதற்கான முக்கிய பொறுப்பு சிறீலங்கா அரசாங்கத்துக்குரியது” என உள்ளகப் பொறிமுறைக்குள் ஈழத் தமிழின அழிப்பு விசாரணைகளை முடக்கியது வரலாறு. தற்போது இவர்களின் அதே கருத்தையே ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும் அப்படியே வெளிப்படுத்தியுள்ளதை, அறிக்கையைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வர். சிறீலங்காவின் முயற்சிகளுக்கு அனைத்துலக வழிமுறைகளால் ஆதரித்து ஆதரவளித்தல் என்பதே இந்த அறிக்கையின் நெறிப்படுத்தலாக உள்ளது. இந்த முறையிலேயே, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனைப் பயன்படுத்தி, பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளைச் சிறீலங்கா மேற்கொள்வதற்கும், நல்லிணக்க முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்கும் உதவுதல்” என்ற வரைபடத்தையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை உணரத் தேவையான நிதி வலுவைச் சிறீலங்கா அரசுக்கு வழங்கவும், சிக்கன நடவடிக்கைகள் நாட்டின் மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான திறனைக் குறைமதிப்புக்கு உட்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், அனைத்துலக நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிப்புறக் கடன் வழங்குநர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். இது ஒருவகையில் சிறீலங்காவின் இன்றைய திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்று, அதற்கான நிதியுதவியை விதந்துரைக்கும் செயற்பாடாகவே உள்ளது.
மேலும், தற்போதைய சிறீலங்கா அரசாங்கம் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், சட்ட விசாரணைகளில் முன்னேறுகிறது என்ற பாணியிலேயே அறிக்கை அமைந்துள்ளமை, அறிக்கையின் எதார்த்தத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையை அறிக்கை பிரிவினையாகவே அறிவித்துள்ளமை யைப் பார்க்கின்றபோது, அதுவும் தமிழரசுக் கட்சி “நாங்கள் பிரிவினை கோரவில்லை” எனத் தேசிய விடுதலை இயக்கம் பிரிவினை கோரியதாக வெளிப்படுத்திய கருத்தியலின் தாக்கம் என்பது தெட்டத் தெரிகிறது. எனவே, ஈழத் தமிழரின் பெரும்பான்மைக் கட்சியெனத் தன்னை முன்னிலைப்படுத்தும் தமிழரசுக் கட்சி சிறீலங்கா ஆட்சியை ஏற்பதும், அதன் உள்ளகப் பொறிமுறையில் தீர்வு காணலாம் என நம்பிக்கை வெளிப்படுத்துவதுமே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மூலம் கூட, கடந்த 16 ஆண்டுகளாக அனைத்துலக விசாரணையைப் பாதிப்புற்ற ஈழத் தமிழர்களால் பெற இயலாது இருக்கிறது. மாற்று அரசியல் தலைமையொன்றை ஈழத் தமிழர்கள் உருவாக்கும் வரை, இந்த இயலாமை தொடரத்தான் செய்யும். இன்றைய செம்மணியின் ஈழத் தமிழின அழிப்பு ஆதாரங்கள் கூட, அதற்குரிய அனைத்துலக கவனத்தை எட்டுவது மிகக் கடினமாக இருக்கும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
அதே வேளை, உலக மக்களினமான ஈழத் தமிழர்களாலும், தாங்கள் வாழும் நாடுகள் உட்பட ஒரு நாட்டைக் கூட ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக விசாரணையை வலியுறுத்த வைக்க இயலாதிருப்பதன் காரணம் புலம்பெயர் ஈழத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் நாடுகளின் அல்லது அமைப்புக்களின் சார்புநிலையில் அனைத்துலக விசாரணையைக் கொண்டுவர வைக்கலாம் என்னும் நோக்கும் போக்குமே ஆகும். இவை நடைமுறைச் சாத்தியமாகா என்பதை, ட்ரம்ப்-பூட்டின் அலாஸ்கா பேச்சுச் சுற்றில் பாதிப்புற்றுள்ள உக்ரேனின் நேரடிப் பங்களிப்பு இல்லாமலே, உலகின் வல்லாண்மைகளான அமெரிக்காவும் ரஸ்யாவும் தாம் விரும்பியவாறு உக்ரேனின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறோம் என உக்ரேன் மக்களின் நிலத்தைத் தாம் நினைத்த மாதிரி பங்கீடு செய்யவும் பயன்படுத்தவும் முயல்வதும் விளக்கியுள்ளது.
இவ்வாறு, உலகில் பாதிப்புற்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், ஆக்கிரமிப்பாளரும் உலகின் வல்லாண்மை மேலாண்மை நாடுகளும் பாதிப்புற்றவர்களின் தேசியப் பிரச்சினைகளுக்குத் தாம் விரும்பிய தீர்வு காணும் புதிய அரசியல் போக்கை, இந்தியாவே 1987இல் இந்தோ-சிறீலங்கா ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பின் பங்களிப்பு இன்றி செய்து தொடக்கிவைத்தது என்பது உலக வரலாறாக உள்ளது.
இதற்கு அந்நேரத்தில், ஈழத் தமிழர்களின் பாராளுமன்ற அரசியல் தலைமையாக இருந்த தமிழரசுக் கட்சியே பக்கத்துணையாக நின்று, ஈழத் தமிழர்களின் இறைமையைத் தேசியத்தை ஒடுக்கமடைய வைத்தது என்பது, ஈழத் தமிழின அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். அதுவரை நேரடியாக ஈழத் தமிழர் அரசியலில் தலையீடு எதனையும் செய்யாதிருந்த இந்தியாவை, ஈழத் தமிழர் அரசியலின் மேலாதிக்க சக்தியாக மாற்றிய தமிழரசுக் கட்சியின் இச்செயலே, ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமையை ஈழத் தமிழர்கள் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிர்காலத்தை அமைக்க இயலாதவாறு, அவர்களை உள்நாட்டு-வெளிநாட்டுப் பேச்சுக்களில் இறைமையாளர்களாகப் பங்கேற்க இயலாத புதிய அரசியல் எதார்த்தத்தை உருவாக்கியது என்பதும் வரலாறு.
இவற்றை உணர்ந்துதான், ஈழத் தமிழர் தேசியப் பேரவையின் சார்பில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராக மக்களாணை உடையவரும், சட்டத்தரணியும், ஈழத் தமிழர் அரசியலின் அங்கமாக 80 ஆண்டுகள் அனுபவமுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சமகாலத் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “எவ்வாறாவது தமிழரசுக் கட்சியுடன் உரையாடல்களை நடாத்தி, ஈழத் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொதுவான கோரிக்கையொன்றை அனைத்துலக விசாரணைக்கு முன்வைக்கும் முறையில் அரசியல் சூழ்நிலையை உருவாக்காது விட்டால், சிறீலங்கா இன்று உருவாக்கிக் கொண்டிருக்கும் அதன் அரசியலமைப்பில் ஈழத் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தக் கூடிய, ஈழத் தமிழரின் தேசிய ஒருமைப்பாட்டுடன் கூடிய அரசியல் அமுக்கத்தை ஏற்படுத்தாது விட்டால், ஈழத் தமிழ்த் தேசியம் அழிந்துவிடும் அபாயம் பலமாக உள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு எதிர்வினையாக, ஈழத் தமிழர் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கச் செயலில் முயன்று வருகின்றார். இந்தக் கட்சிசார்பற்ற முயற்சிக்கு இலக்கு, அவர் அதை ஆரம்பித்த நாளில் இருந்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதன் அவசியத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை கடந்த வாரத்தில் நிரூபித்துள்ளது.
இன்னும் பழைய சித்தைகளில் புதிய திராட்ச இரசத்தை வார்த்து, அது சித்தைகளை வெடிப்பித்துச் சிந்திப்போக வைக்கும் முட்டாள்தனமான அரசியலை நடாத்துவதை விடுத்து, கஜேந்திரகுமாரின் முன்முயற்சிகளில் குறை கண்டால், அதை நிறைவு செய்யக் கூடியனவற்றைச் செய்து, அந்த முயற்சியை ஈழத் தமிழினத்தினை இன அழிப்பு செய்தவர்களுக்கான தண்டனை நீதியையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகார நீதியையும், அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் பெற உழைத்தால் மட்டுமே, செம்மணியின் இன்றைய சாட்சியங்கள் கூட உலகால் அதற்குரிய முறையில் கவனம் பெறும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்