இறைமையும் தன்னாட்சியுமுள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு (Cry) பலமடைய வேண்டிய வாரம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 353

இவ்வாரம் 2025 செப்டெம்பர் 8ம் நாளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது ஆண்டுக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதை மையமாக வைத்து அனைத்துலக செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வாரமாக அமையும். அந்த வகையில் இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத் தொடரில்  இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மேலான இனஅழிப்பு, நோக்கிலான போர், ரஸ்யாவின் உக்ரைன் மக்கள் மேலான நிலஆக்கிரமிப்புடன் கூடிய போர் மற்றும் ஈரானை அணுவாயுத நாடாக மாறாது தடுக்கும் அமெரிக்காவின் வான்வெளி ஆக்கிரமிப்புப் போர், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முயற்சிகளுக்கு எதிரான இந்தியாவின் எதிர்ப்புப் போரில் அமெரிக்காவின் நிலை போன்ற அனைத்துலக சமகாலப் பிரச்சினைகளில் பலவற்றினதும் மனித உரிமைகள் பாதிப்பு விளைவுகளே முதலிடம் பெறுவது தவிர்க்க இயலாதவொன்றாக அமையும்.
இவற்றுக்கிடையில்  ஈழத்தமிழர்களின் மனித உரிமை பிரச்சினை சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைகளின் வழி தீர்க்கப்படுவதற்கு அனைத்துலக நிதி மதி உதவிகளை வழங்குதல் என்ற நோக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் போக்காக மாறுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தெளிவாகத் தொடங்கி விட்டது. இந்த நடைமுறை எதார்த்தத்திற்கு ஈழத்தமிழர்கள் எவ்வாறு இரு வாரத்துள் எதிர்வினை செய்யப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.  உலகளாவிய நிலையில் உலக மக்களின் கவனத்தை, ஈழத்தமிழர்கள் தங்களுக்கான நீதியைப் பெற வைக்க கூப்பாடு வைப்பதன் வழியாக மட்டுமே எதிர் வினை செய்ய முடியும் என்பது இலக்கின் இக்கேள்விக்கான விடையாக அமைகிறது.
இதற்கு ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஈழத்தமிழர்கள் தாங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் இலங்கைத் தீவில், தங்களின் யாராலும் என்றும் பிரிக்க இயலாத இந்த இறைமையின் அடிப்படையிலான, அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையினை முன்னிறுத்தி, நீதிக்கான கூப்பாட்டினை (Cry) பலமாக எழுப்ப வேண்டும். ஈழத்தமிழர்களின் தாயகத்தில் இருந்து எழும் இந்த நீதிக்கான கூப்பாட்டை உலக இனமாக  உலகெங்கும் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும், தொப்புள் கொடி இன உறவாக உள்ள தமிழகத் தமிழர்களும்,  இணைத்து உலக மயப்படுத்த வேண்டும். இந்த ஈழத்தமிழர்களினதும் தமிழகத் தமிழர்களினதும் இனத்துவ ஒருமைப்பாட்டுடன் கூடிய நீதிக்கான கூப்பாடே அனைத்துலக மக்களதும் ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாட்டுக்கான ஆதரவுத் தூண்டலாக அமைந்து அதன் துலங்கலாக ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதியைப் பெற்றுத் தரும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
இன்று ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகள், கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், சிவில் சமூகத்தினர் என்ற ஐங்குழுத்தாக்கத்தினைக் கொண்டவர்களாக உள்ளனர். ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவின் இறைமைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் எதிராக எதனையும் சொல்லவோ செய்யவோ முடியாதவாறு சிறிலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் 6ம் திருத்தத்தின் வழி தடுக்கப்பட்டவர்களாகவே கடந்த 43 ஆண்டுகளாக தங்கள் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பொறுப்புக்களை செய்து வருகின்றனர். இதனால் இவர்களால் ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாட்டினை வெளிப்படுத்த இயலாது. ஈழத்தமிழர்களின் கட்சிகளைப் பொறுத்தவரை கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் மேலான கட்டுப்பாட்டினை வலுப்படுத்துவதையே தலைமைப் பணியாகக் கருதிச் செயற்பட்டு வருகின்றனர். ஈழத்தமிழரின் அமைப்புக்களைப் பொறுத்த மட்டில் தங்கள் தங்கள் அமைப்புக்களுக்கான பொருள் பலம் மனிதப்பலம் என்பவற்றினை வளர்ப்பதனையே தலைமைப்பண்பாகக் கருதிச் செயற்பட்டு வருகின்றனர்.
ஈழத்தமிழரின் இயக்கங்களைப் பொறுத்தவரை பல்குழு பாழ்செய்யும் உட்பகை இவற்றின் வழி பிளவுண்டு போகும் தலைமைப்பண்பையே வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் சிவில் சமூகங்களின் வழியாகவே ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் எதார்த்த நிலை காணப்படுகிறது. ஆனால் சிவில் சமூகங்கள் மாணவர், ஆசிரியர், தொழிலாளர்கள், ஊரில் மக்களுடைய நாளாந்த வாழ்வுக்குத் துணையாக இருப்பவர்கள், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களின் உட்கட்டுமானமாக உள்ள கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் காணப்படும் ஆன்மிகத் தலைமைகள், என்ற ஈழத்தமிழரின் சமூக அடித்தளத் தவர்களின் பங்களிப்பு இல்லாத மேற்குலக அல்லது இந்திய அல்லது சீன மேலாண்மைகளுடன் தங்களை இணைத்துக் கொண்ட பிணைத்துக் கொண்ட முகவர்களின் வழியானதாகவே செயல்நிலை பெறுகின்றன என்பது வரலாறாக உள்ளது.
இதற்கு நேர்மாறாகச் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள், கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், சிவில் சமூகங்கள் என்பன எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா மாணவர்- ஆசிரியர், தொழிலாளர், நாட்டு வைத்தியர், பிக்குகள் வழியான ஐங்குழு சிவில் சமூகத்தை உருவாக்கியது முதல் இன்று வரை இந்த அடித்தளத்தன்மையில் உறுதியாக நின்று கொண்டே தங்களின் அனைத்துலக பிராந்திய வெளிவிவகாரத் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவே சிங்கள பௌத்த பேரினவாதம் எந்த அரசியல்தலைமையும் தாங்கள் சிங்களவர்களுக்கு பௌத்தத்துக்கு பணியாற்றவே ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளதாக துணிந்து அனைத்துலக பிராந்திய வல்லாண்மைகளுக்கு பதிலளித்து ஈழத்தமிழின அழிப்பை, ஈழத்தமிழினத்துடைப்பை, ஈழத்தமிழினப் பண்பாட்டு அழிப்பை தமது அரசியல் கொள்கை கோட்பாடாகவே படைபலத்துணையுடன் முன்னெடுத்து வரும் வரலாறாக உள்ளது.
இதனால் சிங்கள தேச நிர்மாணத்தினை உறுதியானதாகக் கருதும் அனைத்துலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் சிறிலங்காவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அனைத்து அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் அதன் உள்நாட்டுப் பிரச்சினை என்ற வடிவில் ஏற்றுச் சிறிலங்காவின் அரசு மேலும் உறுதி பெறத் தாம் உதவித் தங்களின் சந்தை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இலங்கைத் தீவின் இருப்பையும் வளத்தையும் சிறிலங்காவுடன் இணைந்து பகிர்ந்து கொள்வதினையே தமது தலைமைப்பண்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கான இந்த மாத உதாரணம்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் 2025ம் ஆண்டு செப்டெம்பர் மாத 60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அறிக்கையின் முதன்நிலை அறிக்கை. அதில் விதந்துரைக்கப்பட்டவற்றைச் சிறிலங்கா எந்த அளவுக்கு ஏற்று எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைச் சிறிலங்கா அதற்கான பதிலினை அளித்த பின்னர் ஆராய்ந்து அதற்கேற்ப 60வது அனைத்துலக மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.
இந்நிலையில் அரசியல், கட்சி, அமைப்பு, இயக்க, சமூக வேறுபாடுகளைக் கடந்து “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற உண்மையை உறுதிப்படுத்தி அதில் அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையினை  பயன்படுத்தி நாங்கள் வாழ்வதற்கான அனைத்துலகச் சட்ட முறைமைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கையொப்பங்கள் இட்ட மனுக்களை  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையருக்கு  அனுப்புதலை முதற்பணியாகவும், தொடர்ந்து அனைத்துலக ஊடகங்களில் உண்மைக்கு அப்பால் உள்ள ஈழத்தமிழர் குறித்த தரவுகள் தகவல்களை சரியானதாக மீள் உற்பத்தி செய்வதற்கு தனியாகவும் கூட்டாகவும் உழைப்பதின் வழி உலக கருத்தியலில் ஈழத்தமிழர் குறித்த உண்மையை மீள் உற்பத்தி செய்ய வேண்டியது அடுத்த பணி. 14 நாட்களைக் கால எல்லையாகக் கொண்டு இவற்றை வேகமாகச் செய்ய இலக்கு அழைக்கிறது
ஆசிரியர்

Tamil News