ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 350

வர்த்தகப் போரில் இறங்கியுள்ள அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் உலகின் தெற்கு (குளோபல் சவுத்) உருவாக்கத்தையே உருக்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு 25 வீத வரிவிதிப்புடன் கூடவே இந்தியா ரஸ்யாவுடன் இருந்து எண்ணெய் மற்றும் பறக்கும் போர்க்கருவிகள் இறக்குமதி செய்வதற்குத் தனியான தண்டனை வரியும் விதிக்கும் புதிய அமெரிக்க இறக்குமதி வரிக் கொள்கையை நடைமுறைபடுத்தியுள்ளார்.
இந்தியாவையும் ரஸ்யாவையும் தோற்றுப்போகும் பொருளாதாரங்கள் என விமர்சித்துள்ள ட்ரம்ப் இந்தியாவை ரஸ்யாவுடன் சேர்த்துப் புறம்தள்ளிவிட்டு எப்படி குவாட் அமைப்பில் இந்தியாவுடன் இந்து பசுபிக் கடலில் சீனாவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேவேளை ரஸ்யாவுக்கு உக்ரேன் போரை 10 முதல் 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று இறுதி எச்சரிக்கை  விடுத்து விளையாடுகிறார் அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் எனச் சொன்ன முன்னாள் ரஸ்ய அரசத்தலைவரும் இந்நாள் ரஸ்ய பாதுகாப்புக் கவுன்சிலின் பதில் தலைவருமான டிமிரி மெட்டியாவ் “ட்ரம்புக்கு 1. ரஸ்யா இஸ்ரேலும் அல்ல ஈரானும் கூட அல்ல 2. ஓவ்வொரு புதிய இறுதி எச்சரிப்புக்களும் அச்சப்படுத்துவது மட்டுமல்ல போரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளுமாகும். ரஸ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் அல்ல அவருடைய நாட்டுடனேயே. கண்ணை மூடிக்கொண்டு ஜோ பைடன் சென்ற பாதையில் செல்ல வேண்டாம்.” எனப் பதிவிட்டார்.
இதற்குப் பதிலளிப்பாக அமெரிக்க அரசத்தலைவர் அமெரிக்காவின் இரண்டு அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களை தேவையான இடங்களுக்கு அமெரிக்கா நகர்த்தி விட்டதாகக் கூறியுள்ளமை,  போருக்கு  அமெரிக்கா முனைப்புடன் உள்ளதை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. இச்சூழலில் உலகின் நான்காவது எண்ணெய் வளமுள்ள கடலாகப் பாகிஸ்தான் கடல்வளம் அறியப்படும் இன்றைய நிலையில் அமெரிக்கா பாகிஸ்தானில் தெற்காசியாவுக்கான மிகப்பெரிய எண்ணெய் சேகரிப்பு மையத்தை அமைப்பதற்கான  உடன்படிக்கையைச் செய்துள்ளதன் மூலம்  இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலையை வருவிக்கும் என்று ஆரூடம் வேறு கூறியுள்ளார்.  இந்நிலையில் சிறிலங்காவுக்கு முதலில் 44 வீதமும் அதாவது சிறிலங்கா அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு விதித்து வந்த வரியில் அரைவாசியும் பின்னர் சிறிலங்கா தொடங்கிய பேச்சுக்களின் வழி 30வீதமும் தற்போது 20 வீதம் இறுதி வரியாகவும் விதித்து அமெரிக்க சிறிலங்கா நட்பு நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான இந்த அமெரிக்க ஆதரவுக்கு முக்கிய காரணி இரண்டாவது உலகப்  போரில் உலக வான்வழிப்பாதுகாப்புக்கான இயற்கைத் தளமாகப் பிரித்தானியாவுக்குத் திருகோணமலை விளங்கிய போரியல் வரலாற்று உணர்வு என்பது உலகறிந்த விடயம். அத்துடன் சமகாலத்து வான்வழிப்போர் முறைகளின் வளர்ச்சியில் ஈழத்தமிழர் தாயகத்தின் கடல் நில வான் அமைப்புக்கள் குறைந்த செலவிலான வான் உந்துதல்களை மேற்கொள்வதற்கான  இயற்கை அமைப்புக்களைக் கொண்டுள்ளதும் முக்கிய விடயம். எனவே மாங்குளம், பரந்தன் காங்கேசன்துறை குறித்த இன்றைய சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமிடல்கள் உலகின் “பொருத்தி ஆக்கும் சந்தைக்கான” குறைந்த செலவிலான மனிதவலுவையும் குறைந்த செலவிலான ஆய்வுப் பல்கலைக்கழகங்களை வழங்கும் அதே நேரத்தில் ஈழத்தமிழர் தாயகத்தின் கடல் நில வான் இயற்கை நிலைகளை உலகப்பாதுகாப்புக்கான தேவைகளுக்கு உலகிற்கு வழங்குவதான இரட்டை நோக்கைக் கொண்டதாகவே தொடரும் என்பது உறுதி. ஆனால் அந்த வானுக்கு கடலுக்கு மண்ணுக்குச் சொந்தக்காரரான ஈழத்தமிழர்கள் அது தங்களின் சொந்தம் என்கின்ற இறைமையினை வெளிப்படுத்தும் வழக்கில் பழக்கப்படவில்லை. இதுவே 22.05. 1972 முதல் ஈழத்தமிழரின் வானையும் கடலையும் மண்ணையும் ஆட்சிப்படுத்தத் தகுதியற்றவரான சிங்கள பௌத்த சிறிலங்கா குடியரசே  ஈழத்தமிழர் தாயகத்தின் ஏகபோக உரிமையாளர்களாக இன்று வரை ஆக்கிரமிக்கும் உலக அனுமதியுள்ளவர்களாகத் தங்களை வெளிப்படுத்தி நிற்கின்றனர். எனவே இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற ஈழத்தமிழர்களின் வரலாற்று உண்மையை அவர்கள் தங்கள் அடையாளமாக வெளிப்படுத்தி அதனை மீளுறுதி செய்ய வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்களுடைய தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே அதனைச் செய்ய முடியும் என்பதை வலியுறுத்துவதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இம்மாதத்துக்குள் சிறிலங்கா குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆண்டறிக்கை வெளிவருமுன்பாக  ஒருங்கிணைந்த கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்கு ஈழத்தமிழர்களின் தேசிய ஒருமைப்பாடு என்பது உடனடி அரசியல் தேவையாக உள்ளது. இதனை நடைமுறைச் சாத்தியப்படுத்தக் கூடிய முயற்சியாக கொழும்பில் கடந்த வாரம் தமிழ்த்தேசிய பேரவை சார்பில் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் சட்டத்தரணி சுமந்திரன், எஸ் சத்தியலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், சிவில் சமுகம் சார்பாக முனைவர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கலந்து கொண்டு ஆயத்த முயற்சிகளில் ஈடுபட்டதை இலக்கு வரவேற்கிறது.
அதே வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது 31.07.2025 அன்று வெளியான ஆசிரியத் தலையங்கமான “உள்ளக-வெளியக விசாரணை” என்பதில் “கடந்த 16 ஆண்டுகளாக ஜெனிவாவில் முகாமிட்டவர்களால் ஒரு சிறுவிடயத்தைக் கூட நகர்த்த முடியவில்லை என்னும் போது தொடர்ந்து பொய்களைக் கூறிக் கொண்டிருப்பது தவறானது” எனச் சுட்டிக்காட்டியிருப்பதையும் இங்கு மீள் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.” இந்த ஈழநாடு ஆசிரிய தலையங்கம் இலக்கு இதுவரை கூறிவருகின்ற உண்மையை மீள் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சரியானதை சரியான நேரத்தில் சரியான முறையில் செய்வதற்கு ஈழத்தமிழர்களின் தேசிய ஒருமைப்பாட்டை ஈழத்தமிழர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது. அதே நேரம் ஈழத்தமிழரின் தாயக வாழ்விலும் போதிசத்துவ குழந்தைகளாய் புத்தியைப் பயன்படுத்துவதுடன் இதயத்தையும் பயன்படுத்திட வைக்கும் புதிய கல்வி திட்டத்தை உருவாக்குமாறு கடந்த வாரத்தில் சிறிலங்காவின் அஸ்கிரிய மல்வத்த மகாநாயக்க தேரர்கள் சிறிலங்காவின் பிரதமரை நெறிப்படுத்தி உள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களின் தேசிய ஒருமைப்பாட்டுடன் தங்களின் வரலாற்றைத் தங்களின் பேராசிரியர்கள் வழியாகவும் தங்களின் தொழிற்கல்வி தேவைகளைத் தங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் வழியாகவும் தங்களின் அழகியல் தேவைகள் பரதநாட்டியமும் கர்நாடக சங்கீதமுமல்ல ஈழத்தின் இசை நடன வடிவங்களின் மீளுருவாக்கல் என்பதையும் சிறிலங்காவின் இன்றைய அரசுக்கு வெளிப்படுத்தி அதனை உலகின் கல்விச் சமூகத்துக்கும் தெரிவிக்க வேண்டுமென்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு வேகமாக இயற்றப்பட்டு கொண்டிருக்கின்ற இக்காலத்தில் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யாதவரை இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை யாராலுமே நிமிர்த்த முடியாது என்ற உண்மையையும் சிறிலங்காவுக்கும் உலகிற்கும் ஈழத்தமிழர்கள் தேசிய ஒருமைப்பாட்டுடன் வெளிப்படுத்த வேண்டிய இம்மாதத்தில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு அதனை தொடங்குகிறர்கள் என்பதை மீளாய்வு செய்து பார்த்தால் ஈழத்தமிழர்களின் இயலுமை இயலாமையாக உள்ளமையின் உண்மை தெளிவாகும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
 ஆசிரியர்

Tamil News