ஈழத்தமிழர் தாயக இறைமையை வரலாற்று மீட்பு மூலம் மீட்க காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் உலகஇனமான ஈழத்தமிழருக்கழைப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 374

தைப்பொங்கல் திருநாள்  உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துரைக்க உலக விழாவாகக் கடந்த சனவரி 15ம் நாள்  கொண்டாடப்பட்டது. ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் 1983 யூலை மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஈழத்தமிழின அழிப்பால் அரசியல் புகலிடம் கோரி உலகெங்கும் பெருமளவில் புலம் பெயர்ந்து இன்று அந்நாடுகளின் குடிகளாகப் புலம்பதிந்து வாழுவதால்  தைப்பொங்கலுக்கு இப்பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது என்பது சமகால வரலாறு.  2026ம் ஆண்டுத் தைப்பொங்கல் தினத்தன்று சிறிலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் பிள்ளைகளுக்கான நீதிக்காக வவுனியாவில் 3251 வது நாளாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த ஈழத்தமிழ்த் தாய்மார்கள், தாயகத் தமிழர்களுக்கும் உலக இனமாக உள்ள ஈழத்தமிழர்களுக்கும் பின்வரும் அழைப்பினை விடுத்துள்ளதை ‘இலக்கு” கவனப்படுத்த விரும்புகிறது. அதனை புலம் பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் முழுமையாக அறிந்து செயற்பட வேண்டுமென்னும் பேரவாவில் அந்தத் தாய்மாரின் உள்ள உறுதியையும் சொல்லின் செறிவையும் உண்மையான செயற்பாட்டுக்கான அழைப்பின் வேகத்தையும் தேவையையும் அவ்வறிக்கையில் உள்ள படியே விளங்கிக்கொள்ள  அவ்வறிக்கையை அப்படியே இங்கு ‘இலக்கு’ மீள்பதிவு செய்கின்றது.
“இந்த அறுவடைத் திருவிழா நமது மக்களுக்கு வலிமையையும் ஒற்றுமையையும் கண்ணியத்தையும் நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். மேலும் உண்மை, நீதி, மற்றும் தமிழ் வரலாறு மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கட்டும். தியாகம், வலி, மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாடு நிறைந்த இந்த இடத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் குறித்த உண்மைக்கான எங்கள் கோரிக்கையை மட்டுமல்லாமல், தமிழ் வரலாறு, கண்ணியம், மற்றும் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு அழைப்பையும் நாங்கள் முன்வைக்கின்றோம்.
தமிழ் அறிஞர்களின் தலைமையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு சுதந்திரமான தொல்லியல் திணைக்களத்தை நிறுவ வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். இது தமிழ்ச் சைவத்தின் மற்றும் தமிழ் பௌத் தத்தின் வரலாற்று உண்மைகளைக் கண்டறிந்து வெளிக்கொணரவும், தென்னிந்திய மற்றும் வரலாற்று ரீதியாக சிலோன் என்ற ஐரோப்பியரால் அழைக்கப்பட்ட தீவு உட்பட தமிழ் நாடெங்கிலும் செழித்தோங்கிய பண்டையத் தமிழ் நாகரிகத்தை ஆவணப்படுத்தவும் வேண்டும்.
தமிழ் நாகரிகம் அண்மையில் தோன்றியதல்ல. அது தற்செயலாகவோ அல்லது குடியேற்றத்தாலோ வந்ததல்ல. அது சிங்கள மொழி, சிங்கள அடையாளம் அல்லது பிற்காலத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மகாவம்சக் கதைக்குப் பிறகு தோன்றியதோ அல்ல. தமிழர்கள் இங்கு நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றார்கள். பலசகாப்பதங்களாக சிங்கள இனவாதக் கதைகள் தமிழர்களான எங்களைத் தங்களின் மூதாதையர்களின் நிலத்தில் குடியேறிய வந்தேறிகளென சட்டவிரோதமாக வந்தவர்களென சித்திரித்து வருகின்றன. ஒரு பொய் பலமுறை மீண்டும் மீண்டும் கூறப்படும்போது அது உண்மை போல் ஒலிக்கத் தொடங்குகிறது. இதுதான் தமிழ் மக்களான எங்களுக்குச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம்.
இந்த நிலம் சிங்கள இனத்திற்கு முன்பும், சிங்கள மொழிக்கு முன்பும், மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்பும் ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்த வரலாற்று உண்மை தமிழ் பிள்ளைகளுக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும், சாதாரண தமிழ் பொது மக்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும். இது அனைத்துலக மக்களுக்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் நமது கதையை உரக்கத் தெளிவாக மீண்டும், மீண்டும் சொல்லும் போது, சிங்களத் தலைவர்கள் தங்கள் கதையைத் தொடர்ச்சியாகவே கேட்கச் செய்ததைப் போலவே ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகளுக்கும் நமது கதையைத் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்லிக் கேட்கச் செய்ய வேண்டும்.  அப்பொழுது அவர்கள் நிச்சயம் செவிசாய்ப்பார்கள்.
நீண்டகாலப்போராட்டத்திற்கும், தாய்மார்களின் தியாகத்திற்கும் சாட்சியாக விளங்கும் இந்த இடத்திலிருந்து, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைப் பற்றிய உண்மையை வெளிக்கொணரவும், தமிழ் மக்கள் மீது தொடரும் அழிவைத் தடுத்து நிறுத்தவும், எங்கள் மூதாதையர்களின் தமிழர்களின் இறைமையை மீட்டெடுக்க ஆதரவளிக்கவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாங்கள் மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுக்கின்றோம்” இதுதான் அந்த எங்களின் அன்புக்கும் மதிப்புக்குமுரிய அந்த காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தாய்மாரின் உள்ள வெளிப்பாடு செயற்பாட்டுக்கான அழைப்பு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு சுயாதீனமான தொல்லியல் ஆய்வு மையத்தினை நிறுவுதல் என்பது ஒரு எல்லை வரையிலேயே நடைமுறை சாத்தியமாகும் என்பது உலகத் தமிழர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் அதுவரை பயணிக்க யாழ்ப்பாணப்பல்கலைக்கழத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய பொறுப்பு உலகத் தமிழர்களுக்கு உள்ளது. அதனுடன் சேர்த்து இங்கிலாந்தில் அத்தகைய ஒரு ஆய்வு மையத்தை அமைப்பதில் அல்லது கனடாவிலோ, பிரான்சிலோ, சுவிட்சலாந்திலோ, யேர்மனியிலோ, நோர்வேயிலோ, தனியே தொல்லியலுக்கு மட்டுமல்லாது ஈழத்தமிழர் கற்கைநெறிக்கான பீடங்களை அமைக்க உலகத் தமிழர்களால் முடியும். அதனைச் செய்ய ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும் என்பது இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது.
மேலும் இம்முறை யாழ்ப்பாணத்துக்கு நேரடியாகச் சிறிலங்காவின் அரசத்தலைவர் வந்து பொங்கல் விழாவில் மக்களுடன் மருதடி, வேலணை என இணைந்து கொண்டாடினார். அலரி மாளிகையில் தேசிய விழாவாகவே பொங்கல் விழாவில் சிறிலங்காவின் பிரதமர் முனைவர் ஹரிணி அமரசூரியா கலந்து சிறப்பித்தார். ஆனால்  பொங்கல் விழாவிற்குச் சிறிலங்காவின் அரசத்தலைவர் வெளியிட்ட வாழ்த்தில் பொங்கல் விழாவையே இந்துக்களின் விழாவாக விளித்துத் தனது வாழ்த்தினை வழங்கியமை எவ்வாறு தமிழர் பண்பாட்டு அடையாளத்தை பொங்கல் விழாவிலிருந்து விலத்தி பொங்கலை இந்து மத அடையாளமாக மாற்றி  ஈழத்தமிழினத்தின் தேசிய நீக்கத்தை முன்னெடுத்துள்ளார் என்பதை இலக்கு இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இந்நேரத்தில் உண்மையையும் நேர்மையையும் மட்டுமே கொண்டுள்ள எங்கள் தாய்மார்  எதற்காகத் தமிழர் வரலாற்று மீட்புக் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வீணாக அரசியல்வாதிகள் செய்ததைப் பற்றியும் செய்வதைப்பற்றியும் செயல் குறித்த மதிப்புத் திறனாய்வாக இல்லாது தனிமனித வசைபாடலாக அல்லது ஒருக்கால் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லும் வாய்ப்பாட்டு முறை விமர்சனமாகப்  பேசிப்பேசியே மக்களையும் திசைதிருப்பிச் செய்ய வேண்டியனவற்றைச் செய்யாது காலத்தை வீணடிக்கும் ஊடகமுறைமை மாற்றப்பட வேண்டும். இது மக்களாகிய உங்கள் கைகளில்தான் உண்டு. முறையாக நேர்மையான கண்ணியமான முறையில் ஆதாரங்களுடன் வளர்ச்சிக்கான விமர்சனங்களை முன்வைக்காது வெறுப்பரசியல் விமர்சனம் செய்பவர்கள் யாராக இருப்பினும் இலக்காக இருந்தாலும் கூட ஊடகச் சமநிலையை மக்களாகிய நீங்கள் காலந்தாழ்த்தாது உங்கள் கருத்துக்களை சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு நேரடியாகப் பண்பாக வெளிப்படுத்துவதன் மூலமே அதனை நடைமுறைச்சாத்தியமாக்க முடியுமென்பதே இலக்கின் எண்ணம்.
கனடாவில் தைமாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாக அறிவிக்கப்பட்ட பொழுது ஈழத்தமிழர்கள் தமக்கான மரபுரிமை மாதமாக யூலை மாதத்தைக் கோரியிருக்க வேண்டும். ஏனெனில் மரபு உரிமை மாதம் என்பது அமெரிக்காவில் தொடங்கப்பெற்ற பொழுது அங்கு குடிவரவு பெற்றவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்ற வரலாற்றையும் எவ்வாறு அவர்கள் அந்த நாட்டுக்குச் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வாழ்வில் பங்களிப்புக்கள் செய்கிறார்கள் என்பதையும் கூட வாழும் மக்களுக்கு வெளிப்படுத்திச் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர வாழ்வை குடிவரவு பெற்றவர்கள் உறுதி செய்வதற்கான அரசியல் முறைமையாகவே தொடங்கப்பெற்றது. அந்த வகையில் 1983 யூலை சிறிலங்காவின் ஈழத்தமிழின இனஅழிப்பே ஈழத்தமிழரின் உலக நாடுகளுக்கான அரசியல் புகலிட வாழ்வைத் தொடக்கியது என்பது வரலாறு. ஆகவே யூலை மாதத்தையே ஈழத்தமிழர் மரபுரிமை மாதமாக கொண்டாடுவதே அவர்களின் சமத்துவ வாழ்வுக்கு தேவையானதாகிறது. இந்தத் தவறை பிரித்தானியாவிலும் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருவது ஈழத்தமிழர்களின் அரசியல் அறியாமை என்றே இலக்கு கருதுகிறது.
மேலும் தமிழரசுக்கட்சியின் தலைமைகளில் ஒருவரான சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சிறிலங்கா அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவின் யாழ்ப்பாண பொங்கல் விழாக்களில் தமிழரசுக்கட்சி பங்குபற்றாது என்பதை அறிவித்த பொழுது “பிரஜா சக்தி” என்ற பெயரிலான அமைப்பின் மூலம் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளினை தவிர்த்து மக்களுக்கான நிவாரணப்பணிகளைச் செய்யும் சமாந்திர நிர்வாகத்தை நடாத்துவதினாலேயே விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் சுனாமி நிவாரணப்பணிகளின் பொழுது சந்திரிகா பண்டாரநாயக்கா இவ்வாறான முறையில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நிவாரணப்பணிகளைச் செய்வதை இதே ஜே வி பியினரே அரசியலமைப்புக்குச் சமாந்தரமான நிர்வாகத்தை அனுமதிக்கக் கூடாதென நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தடுத்தனர். தாங்களும் அவ்வாறு வழக்குத் தொடுக்கப் போவதாவும் சட்டத்தரணி சுமந்திரன் கூறியுள்ளார். இது குறித்து அனைத்துலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்யுள்ளதையும் இலக்கு இவ்வாரத்தில் எடுத்துரைக்க விரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News