எட்கா உடன்படிக்கை: தேசிய மக்கள் சக்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றியமைக்காக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான  அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இந்தியா – இலங்கை இடையே எட்கா உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தத் தருணம், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து இந்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தது.

இந்த நிலையில்,இந்திய பயணத்தின் போது  ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதையடுத்து நடைபெற்ற இரு தரப்பு கூட்டு ஊடக சந்திப்பில் பிரதமர் மோடி,’இரு தரப்புகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக எட்கா உடன்படிக்கையை உடனடியாக கைச்சாத்திட முயற்சிக்கின்றோம்,” என்று கூறியதையடுத்து இலங்கை எதிர்க்கட்சிகள்  அநுர அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில்,எட்கா ஒப்பந்தம் குறித்த கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் பிரதான சில விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எட்கா, மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

இவை இதற்கு முன்னரும் பல்வேறு அரசாங்கங்களால் அவதானம் செலுத்தப்பட்ட ஒரு காரணியாகும். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அந்த பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் சென்று பதிலளித்துள்ளார். மஹிந்த, மைத்திரி, கோட்டா மற்றும் ரணில் அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கம் விரைவாகச் செல்வதாகவே தோன்றுகிறது.

தேர்தலுக்கு முன்னர் எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட பிரதான தரப்பு தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகும். தற்போது இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. ஆனால் மக்களிடம் அதனை மறைக்கின்றனர். எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதானால் அதனை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும்.

அதேபோன்று அன்று இவற்றை எதிர்த்து விட்டு, தற்போது சரியென ஏற்றுக் கொள்வார்களானால் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அன்று மக்களை நாம் ஏமாற்றி விட்டோம். ஆனால் இதுவே யதார்த்தம் என்பதை அரசாங்கம் நாட்டுக்கு கூற வேண்டும் என்றார்.