உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (19) ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இதன்போது வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறித்த அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வந்து, விவாதம் நடத்தப்படுமாயின் அது குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
பாராளுமன்ற விதிகளுக்கு அமைய, முதலில் குறித்த அவநம்பிக்கை பிரேரணை பாராளுமன்றுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறானதொரு விவாதம் இடம்பெறுமாயின் அதன்போது வெளிப்படுத்துவதற்கு பல விடயங்கள் உள்ளன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னோக்கி சென்றுள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கும் மேலதிகமாக தற்போது பல தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக சஜித் பிரேமதாசவும் சிறிது காலம் பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் இருந்தனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான குழுக்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கான தகவல்களும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்திய தரப்பினரின் தலையீடு உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் உள்ளீர்களா? என்றும் அவரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என்று குறிப்பிட்டார். எனினும் அங்குள்ள சில பயங்கரவாத குழுக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க கூடும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.