பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கம் தமிழர்கள் மீது வன்முறையாக மாறும் –  மட்டு.நகரான்

கிழக்கில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கடந்த காலத்தில் பல தடவைகள் நாங்கள் எழுதியிருந்தோம்.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கரையோரப்பகுதிகள் என்பது பெருமளவான தமிழ் பேசும் மக்களின் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் அவற்றினை கைப்பற்றும் நோக்கில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

திருகோணமலையினை பொறுத்த வரையில் 30வருடங்களுக்கு முன்னர் தமிழ் பேசும் மக்களே அதிகளவில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கம் என்பது தமிழர்கள் மீது வன்முறையாக கட்டவிழ்த்துவிடப்படும் நிலைமையே தொடர்ச்சியாக காணப்படுகின்றது.

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த மோதல் சம்பங்கள் என்பது யுத்தம் முடிவுற்ற காலம் தொடக்கமே இடம்பெற்றுவருகின்றது.

1983ஆம் ஆண்டுக்கு பின்னர் திருகோணமலை நகர்ப்பகுதியில் மீன்பிடிக்கு என வந்தவர்கள் இன்று திருகோணமலை நகரத்தையே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முன்னெடுப்புகளை முன்னெடுத்துவருவது என்பது சூட்சுமமான முறையில் அரசியல் பின்பலத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற நோக்குடன் தமிழ் தேசிய பரப்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத சூழ்நிலையிலேயே இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாரிய இடர்பாடுகளையும் சிங்கள தேசியவாதம் காலூன்றுவதற்கான வழிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் விடயம் என்பது ஒன்றாகவேயிருக்கின்றது.கிழக்கு மாகாணம் பாதுகாக்கப்படவேண்டுமானால் தமிழ் தேசிய கட்டமைப்பு ஒன்றுபட்டதாக கிழக்கில் கட்டமைக்கப்பட வேண்டும்.அத்துடன் சிவில் சமூக செயற்பாட்டுத்தளத்தில் உள்ள தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் சக்திகள் ஒன்றிணைக்க வேண்டும். அத்துடன் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள்தான் கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கும் விடயமாகயிருக்குமே தவிர வெறுமனே ஐநா செல்வதினாலோ,புலம்பெயர் தேசங்களில் போராட்டங்களை முன்னெடுப்பதனால் மட்டுமோ கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியாது.அதனால் கிழக்கில் கரையோரப்பகுதிகளை இலக்காக கொண்டு முதலீடுகளை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

தெற்கில் உள்ள பெரும்பான்மையினத்தவர்கள் கிழக்கில் வந்து முதலீடுகளை செய்து கடற்தொழிலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியுமானால் அந்த மாகாணத்திலேயே பிறந்து அந்த கடற்கரை பகுதியிலேயே வளர்ந்த எங்களால் ஏன்முடியாமல்போனது என்பது கேள்வியாகவே இன்று இருந்துவருகின்றது.

யுத்தம் இந்த நாட்டில் ஆரம்பிப்பதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தினை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட குடியேற்ற செயற்பாடுகள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின்போது ஓரளவு குறைந்திருந்த நிலையில் இன்று யுத்தம் மௌனிக்கப்பட்ட காலத்தின் பின்னர் மீண்டும் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்படும் நிலையில் தமிழர்கள் தமது பகுதிகளை பாதுகாக்க என்னசெய்யவேண்டும் என்பதை தொடர்பில் எந்தவித திட்டங்களும் இல்லாத நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் கரையோப்பகுதிகளை இலக்குவைத்து நீண்டகாலமாக சிங்கள பேரினவாத சக்திகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.எல்லைப்பகுதிகளை இலக்குவைத்து ஒரு பகுதியினரும் கரையோரப்பகுதிகளை இலக்குவைத்து இன்னுமொரு பகுதியினருமான தமிழர் தாயகப்பகுதியை கூறுபோடுவதற்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளை தடுப்பதற்கான வியூகம் அமைக்கப்படவேண்டும்.

கிழக்கினைப்பொறுத்த வரையில் மீன்பிடியும் விவசாயமும் இரு கண்களாக தமிழர்கள் கொண்டுள்ள நிலையில் அவற்றினை இலக்கு வைக்கும் வகையிலேயே குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.அதற்காக தமிழ்-சிங்கள மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி தமிழர்களை இடம்பெயரசசெய்து தங்களது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர்.
திருகோணமலையைப்பொறுத்த வரையில் பெரும்பாலான பகுதிகள் பௌத்த மயமாக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளன.

கோணேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாசலில் பிரட்றிக் கோட்டை இருக்கிறது. சற்றுத் தள்ளி உட்புறமாகப் புத்தரின் பெரிய உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோணேசுவரர் ஆலயத்துக்குப் போவோர்கள் இந்தப் புத்தர் சிலையைக் கடந்தே செல்ல வேண்டும். புத்தரின் சிலைகள் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பின் சின்னமாக திருகோணமலை மாவட்டம் முழுதும் பரவலாக நிறுவப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பிரட்றிக் கோட்டை வாசலில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை ஆகும்.

இந்த நாட்டினை வெள்ளையர் ஆட்சியிலிருந்து விட்டுச்செல்லும்போது தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளே இன்று தமிழர்களை இந்த நாட்டில் போராடும் இனமாக மாற்றியுள்ளது.1901ஆம் ஆண்டு தமிழர்களின் நிலப்பரப்பு சிங்கள பகுதிகளுடன் இணைக்கப்பட்டு கிழக்கில் தமிழினம் சிறுபான்மையாக்குவதற்கு தூபமிட்டவர்கள் இந்த பிரித்தானிய ஆட்சியாராகும்.அன்றைய அவர்களின் செயற்பாடு இன்று கிழக்கில் தமிழர்கள் பாரிய போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கானது சுமார் 9633சதுர கீலோமீற்றர் பரப்பளவினைக்கொண்ட பகுதியாகும்.இவற்றில் சுமார் 650 சதுர கீலோமீற்றர் பரப்பளவு நீர்நிலைகளைக்கொண்டதாகும்.இந்த நீர் நிலைகள் கடல்களாகவும் வாவிகளாகவும் காணப்படுகின்றன.இந்த நாட்டில் மீன்பிடியில் கிழக்கில் கொடிகட்டிப்பறந்தவர்கள் தமிழர்கள்.ஆனால் இன்றைய நிலைமை என்பது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது.

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தினை வெறுமனே இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதலாக மட்டும் பார்க்கமுடியாது.திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.திருகோணமலை நகரையண்டிய பகுதியானது இப்பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்து இன்று  சிறுபான்மையாக மாற்றப்பட்டுள்ளார்கள்.இப்பகுதியில் சிங்களவர்கள் கொடுக்கும் தொடர்ச்சியான தொந்தரவுகள் மற்றும் அவர்கள் வியாபார ரீதியில் அடைந்துள்ள வளர்ச்சி தமிழர்களை அப்பகுதியிலிருந்து நகர்த்திவருகின்றது.

அதனை தாண்டிய மீதியுள்ளவர்களையும் அகற்றுவதற்காகவே இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றது.ஒரு விளையாட்டு நிகழ்வினை தமிழர்கள் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை கொண்டு அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

திருகோணமலையினைப்பொறுத்த வரையில் தமிழ் தேசிய பரப்பிலிருப்பவர்களினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் நிலைமையே இருந்துவருகின்றது.கிழக்கு மாகாணம் வடகிழக்கு மாகாணத்தின் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தமிழ் தேசிய பரப்பில் உள்ளோர் உணர தவறும் நிலைமையே காணப்படுகின்றது.

திருகோணமலையினைப்பாதுகாக்கும்போது மட்டக்களப்பும் பாதுகாக்கப்படுவதற்கான ஏதுவான சூழ்நிலை காணப்படுகின்றது.

திருகோணமலையினைப்போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் கரையோரங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் கடந்த காலத்தில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன.பிள்ளையானை முதலமைச்சராக கொண்டுவந்து மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை வளர்ச்சி என்ற கருப்பொருளின் கீழ் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்டன.

அவை பெரும் தாக்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாறிவரும் நிலையில் மேய்ச்சல் தரைப்பிரச்சினை,கரையோரப்பகுதிகளில் மீன்பிடி என்ற போர்வையில் தமது இருப்பினை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சிங்கள தேசியம் முன்னெடுத்துவருகின்றது.அதற்கு பக்கபலமாக கிழக்கு மாகாண ஆளுனரும் இராணுவத்தினரும் செயற்பட்டுவருகின்றனர்.

கடந்த காலத்தில் திருகோணமலையில் அரசு முன்னெடுத்த சிங்களக் குடியேற்றங்களுக்குப் புறம்பாக சட்டத்துக்கு மாறான அரசியல் நோக்கோடு கூடிய குடியேற்றங்களும் முடுக்கிவிடப்பட்டன.  திருகோணமலையை  பெரும்பான்மை சிங்களவர் கொண்ட மாவட்டமாக்குவது காலத்துக்குக் காலம் ஆட்சி பீடத்தில் இருந்த சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்தது. இதில் பச்சைக் கட்சிக்கும் நீலக் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து இருக்கவில்லை.

தமிழ் கிராமங்களை வளைத்து சட்ட விரோத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.  குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னமரவடி போன்ற கிராமம்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகளை இன்று மட்டக்களப்பிலும் முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அதன் ஒரு கட்டமாகவே அண்மையில் மட்டக்களப்பு நகரில் சிங்கள பாடசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ் தேசிய பரப்பில் உள்ளவர்கள் உணர்ந்துசெயற்படுவதே வடகிழக்கு இணைந்த தாயகத்தினை பாதுகாப்பதற்கான வழியாகயிருக்கும் என்பது எமது கருத்தாகும்.நாங்கள் வெறுமனே காணாமல்போனவர்களின் பிரச்சினை,இறுதி யுத்ததின்போது நடைபெற்ற படுகொலைகளை மட்டும் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளும் செயற்பாடுகளினால் கிழக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அத்துமீறல்களும் ஆக்கிரமிக்கப்புகளும் கண்டுகொள்ளபடாமலே செல்கின்றது.இந்த நிலைமையினை உணர்ந்து நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.