அம்பாறையில் 24 மருத்துவமனைகளை முடக்கி மருத்துவர்கள் போராட்டம்

அம்பாறை – அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக செயற்படும் மருத்துவ அத்தியட்சகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தின் கரையோர வலயத்திலுள்ள, 8 ஆதார மருத்துவமனைகள் மற்றும் 16 பிரதேச மருத்துவமனைகளின், மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியே பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் நிர்வாகம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துரைத்த, மருத்துவ அத்தியட்சகர், அம்பாறையிலுள்ள ஏனைய மருத்துவமனைகளில் பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபட்ட போதிலும், அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் செயற்பாடுகள் வழமையை விட மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தன்மீதான தனிப்பட்ட குரோதங்களை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கும் நோக்கிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பை ஏற்பாடு செய்ததாகவும் மருத்துவ அத்தியட்சகர் குறிப்பிட்டார்.