‘புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம்’,இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பிடம் தெரிவிப்பு

347 Views

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம், ஆனால் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் திங்கட்கிழமை (28) பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களில் தாம் கூடிய அக்கறை செலுத்துவதாகவும், அதேபோல் அரசியல் அமைப்பு உருவாக்கம் தவிர்ந்து, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விடயங்களில் உண்மையை கண்டறிதல், வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி விடுவிப்பு மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அரச தரப்புடன் பேசியதாகவும் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேபோல் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், ஆனால் நீண்ட காலமாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டு வருவதாகவும் சம்பந்தன் அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு வழங்கிய கடிதம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து எம்மத்தியிலும் நம்பிக்கை இல்லை எனவும், ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு சில அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், திங்கட்கிழமை காலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை சந்தித்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி முழுமையாக தெளிவுபடுத்தியதாக சம்பந்தன் தரப்பிடம் தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இப்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு நகர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் கூடிய நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கும் இல்லையெனவும், 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.

அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது தமக்கும் தெரிவதாக கூறியுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர், தமிழர் தரப்பு இந்தியாவிற்கு அனுப்பிய கடிதம் குறித்து கேட்டறிந்துகொண்ட போதிலும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி- வீரகேசரி

Tamil News

Leave a Reply