தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு போதுமான மற்றும் சுயாதீனமான நிதி ஆதாரங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுரா ஏ. கல்ஹேனா ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் செயல்பாடு மற்றும் நிதி சுயாட்சி குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தக் கடிதம், ஆணைக்குழுவிற்குள் கடுமையான பணியாளர் பற்றாக்குறையையும், எதிர்காலத்தில் அதன் செயல்பாட்டை அச்சுறுத்தக்கூடிய வகையிலான சட்ட திருத்தங்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் எதிர்ப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
தொடர்புடைய பிரச்சினைகள் “ஆணைக்குழு சுயாதீனமாகவும் திறம்படவும் செயல்படும் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்கள் உள்ளிட்ட சகலருடனும் கலந்தாலோசிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி திசாநாயக்கவிடம் அழைப்பு விடுத்துள்ளது.



