முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த எல்லைக்கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் தடைகளை உடைத்தெறிந்து விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த எல்லைக்கிராமத் தமிழ் மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ரவிகரன், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறாக குறித்த எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, உடனடியாக அப்பகுதித் தமிழ் மக்கள் பயன்படுத்திவந்த நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் குறித்த குளங்களின் கீழான விவசாய நிலங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் இவ்வாறு வெளியேற்றப்பட்ட குறித்த ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த எல்லைக்கிராம மக்கள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது பூர்வீக வாழிடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட பிறகு அந்த மக்கள் தாம் பூர்வீகமாக நெற்செய்கையில் ஈடுபட்டுவந்த முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், சாம்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டபோது தாம் நெற்செய்கைக்குப் பயன்படுத்திவந்த குளங்கள் மற்றும் அக்குளங்களின் கீழான வயல்நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டிருந்த தமது பூர்வீக விவசாயக் குளங்களையும், அவற்றின் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்குமாறு கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி தமிழ் மக்கள் மற்றும் ரவிகரன் ஆகியோரால் தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதும் குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.
குறித்த நீர்ப்பாசனக் குளங்களின் கீழான வயல்நிலங்கள் பலவற்றுக்கு தமிழ் மக்களிடம் ஆவணங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த நீர்ப்பாசன வயல்காணிகளை ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டுகாலப்பகுதியில் அப்போதைய அரசால் மகாவலி அதிகார சபையின் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக தமது பூர்வீக நீர்ப்பாசனக் குளங்களையும், அவற்றின் கீழான நீர்ப்பாசன வயல் நிலங்களையும் இழந்துள்ள குறித்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணிப் பகுதி எல்லைக்கிராமத் தமிழ் மக்கள் மானாவாரி நிலங்களிலேயே தற்போது தமது நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் குறித்த மானாவாரி விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் நெற்செய்கை மேற்கொள்ளும்போது வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகார சபை என்பன தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்திவருகின்றன.
தமிழ் மக்களுக்குரிய குறித்த மானாவாரி விவசாயக் காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இத்தகைய பல்வேறு இடயூறுகளுக்கு மத்தியிலேயே கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் தமது மானவாரி விவசாய நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மாரியாமுனை, கன்னாட்டி, எரிஞ்சகாடு, மேல்காட்டுவெளி, கீழ்காட்டுவெளி, பாலங்காடு, நாயடிச்சமுறிப்பு, சூரியனாறு, பூமடுகண்டல், சிவந்தாமுறிப்பு, வெள்ளைக்கல்லடி உள்ளிட்ட தமது பூர்வீக மானாவரி விவசாய நிலங்களில் தமிழ்மக்கள் இம்முறையும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறு பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடுவதற்கான தயார்ப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை வனவளத் திணைக்களத்தினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தடுத்துவருவதாக அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக கடந்த 29.08.2025 அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அவர்களுடைய விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு வனவளத் திணைக்களம் உள்ளிட்ட எவரும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது எனவும் அக்கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இருப்பினும் தொடர்ந்தும் வனவளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் தமக்கு நெற்செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் வேலைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இந்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முறையீடு செய்துமிருந்தனர்.
இந்நிலையில் குறித்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய எல்லைக்கிராம மக்களின் முறைப்பாட்டையடுத்து துரைராசா ரவிகரன் இன்று கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையத்திற்குச் சென்று, கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தருடன் கலந்துரையாடியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், பிரச்சினைகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின் நீர்ப்பாசனக் குளங்களும் அவற்றின்கீழான நீர்ப்பாசன விவசாய நிலங்களும் ஏற்கனவே பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த எல்லைக்கிராமங்களைச்சேர்ந்த எமது தமிழ் மக்கள் மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கையை மாத்திரமே மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் எமது மக்கள் மானாவரி விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கும் வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட தரப்பினரால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர்.
இதுதொடர்பில் கடந்தமாதம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. எமது மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாதெனவும் தீர்மானமும் எட்டப்பட்டது.
இவ்வாறிருக்கு தொடர்ந்தும் எமது மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறகேளை ஏற்படுத்துவது பொருத்தமான விடயமில்லை.
இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தினால் இந்தமக்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயற்படும் திணைக்களங்களின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது.
தொடர்ந்தும் எமது மக்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்த தடைகளை உடைத்து எமது மக்கள் நெற்செய்கை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.