வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கலந்துரையாடல்!

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ‘சிலோன் கடற்படைக் கப்பல் உத்தரா’ முகாமில் நடைபெற்றது.

வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் கடந்த 10ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், எல்லை தாண்டிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடத்தல்களைத் தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடல் வளங்களை நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவித்தல் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, பொலிஸ், மீன்பிடி திணைக்களம் மற்றும் மீனவ சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மீன்பிடி சூழலை உருவாக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.