இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகளை மீண்டும் முன்னெடுப்பது குறித்து காத்திரமான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தடயவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும், தடயவியல் மருத்துவ நிபுணருமான வைத்தியர் செல்லையா பிரணவனுடன் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் “செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வைத்தியர் பிரணவனுடன் ஆலோசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
மனிதப்புதைகுழிகளை அகழ்வு செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச தரத்திலான அறிவியல் மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அகழ்வுப் பணிகள் மிகவும் வெளிப்படையான முறையிலும், எவ்வித அரசியல் தலையீடுகளுமற்ற சுயாதீனமான முறையிலும் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பாரிய அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் நிபுணத்துவ வளங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதையும், உண்மைகள் கண்டறியப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான சகல விதமான ஒத்துழைப்புகளையும் ஆதரவையும் வழங்க இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தயாராக உள்ளது என மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் இதன்போது உறுதி அளித்துள்ளார்.



