இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்: கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி, கண்டி மாவட்டத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளதுடன், 229 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவி இயக்குநர் இந்திக ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இன்று (04) 32,987 குடும்பங்களைச் சேர்ந்த 1,05,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக, 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 67,921 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 8,471 குடும்பங்களைச் சேர்ந்த 29,257 பேர் 319 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில், 1259 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 10,014 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.