திலீபனின் மண்டியிடா ஈகமும், ஈழத்தமிழரின்  தன்னாட்சி உரிமையும்-அ . சுரேஷ்

அது தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத மேடை. பல்லாயிரம் மாணவச்செல்வங்கள், மக்கள்  என  திரண்டிருந்தோரின் கள்ளமற்றக்கண்ணீர் அலைகளால் மோதுண்டு கிடந்தது அந்த சமாதான மேடை . ஒரு பிள்ளைக்காக நாடே அழுத கருணை மிகுந்த தருணம் அது.

ஆதிக்க சக்திகளின் பொய்யொன்றின் மையத்தை சிதைக்க பார்த்தீபன்-திலீபன் ‘தீ’ எனவாகி நின்ற நாட்களவை. எளிமையும், இயல்புமாக துளிர்த்த திலீபன், அன்று பெரும் மக்கள் புரட்சிக்கு வித்திட்டான்.

 ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என முழக்கம் முன்வைத்தான். பல்லாயிரம் அழுகுரல்கள் அடிவயிற்று ஆவேசமாக எழுந்தன. அமைதி போராட்டக்களத்தின் அடி நாதமாக அறச்சீற்றம் பொங்கியெழுந்தது.
திலீபன், தான் விரும்பி ஏற்ற சாவினை தொட்டுவிடும் தூரத்தில் இருந்தான். நினைவிழந்தவனாக சுருண்டு கிடந்தான். அந்த படுக்கையில் இருந்து உன்னிமிதந்த யாவுமே அவனது தூய சிந்தனைகள், எண்ணங்களின் சக்தியக் கதிர்வீச்சுக்கள்.
இந்திய-இலங்கை கூட்டு அரசுகளின் அமைதி ஒப்பந்தம் ஒரு ‘பிரமாண்டமான பொய்’ என்ற பேருண்மையை உலக மேடையில் ஏற்றுவதற்காக உண்ணாவிரத மேடையில் ஏறி அமர்ந்தவன் எங்கள் திலீபன்.

உண்மையும் தர்மமும் எமது பக்கம் என்ற உயரிய சிந்தனையோடு தமிழீழ விடுதலைப்போரை தலைமை தாங்கிய தேசியத்தலைவரை மகா உன்னத வழிகாட்டியாக ஏற்று நின்றவன் திலீபன். சத்தியத்தை நம்பி போரிட்டவன் திலீபன். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை  வென்றெடுக்க சிங்கள பேரினவாதத்தின் மேலாதிக்க வரைகோட்டை அதன் தொடு புள்ளியில் இருந்து அழித்து விட போராடியவன். அதற்காகவே வாழ்ந்தவன்.

பெளத்த சிங்கள பேரினவாத அரசியல் சகதிக்குள் புதையுண்டு கிடந்த சிங்கள ஆட்சியாளர்களால்  நசுக்கப்பட்ட தமிழர் தன்னாட்சி உரிமையை மீட்டெடுத்து  சுந்தந்திர சமதர்ம தமிழீழம் அமைப்பதற்காக தன்னை ஒப்புக்கொடுத்தவன் திலீபன்.
இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி தாங்கொணா துன்பங்களைச்சுமந்து அளப்பெரிய ஈகம் புரிந்து ஈழத்தமிழர் நடாத்திய வீரம் செறிந்த விடுதலைப்போரை, அதன் வளர்ச்சியை, வீறு கொண்ட எழுச்சியை வஞ்சகத்தால் வீழ்த்திவிட நினைத்த பேரினவாத, வல்லாதிக்க அரசுகளின்  கூட்டுச் சதியே திலீபனை நாம் இழக்க காரணமாகியது.

உலகின் பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியா அதன் ஆட்சியாளர்கள் அதன் மைய அரசியல் பீடம் அதன் தலைமை தம்மை ஒரு மீட்பனாக காட்டியது
பெளத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளரிடமிருந்து தமிழீழ மக்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்தது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி தமிழ் மக்களின் விருப்புக்குமாறாக போராடும் தலைமைகளின் ஒப்புதல் எதுவும் இன்றி  தன்னுடைய  சுய அரசியல் நலனுக்காக மட்டுமே தாயாரித்துக்கொண்ட இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தத்தை ஏற்குமாறு வற்புறுத்தி மிரட்டி அதிகார வல்லாண்மையைத் திணித்தது
தாம் எப்போதுமே தமிழர் பக்கம் நிற்போம் என்ற பொய்யான வாக்குறுதியைத் தந்து விட்டு தமது பிராந்திய அரசியல் நலனுக்காக அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றி முடித்தது.

35 ஆண்டுகள் கடந்தும் இத்தனைக் கொடிய இனவழிப்புக்குப் பின்பும் உப்புச்சப்பற்ற ஒப்பந்தத்தை தனக்கு சார்பான ஓர் அவலமான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தி வருவது ஈழத் தமிழ் மக்களின் துரதிஸ்டமே. 1987. ஜூலை 29 தில் இலங்கை இந்திய அரசு தலைவர்களின் கையெழுத்துக்களுடன் அமைதி உடன்படிக்கை கைச்சாத்தானது.

அமைதிகாக்கும்  படை என்ற பெயரில் இந்திய படைகள் பாரிய போர் ஆயுத, தளபாடங்களுடன் தமிழர் தாயகமெங்கும் ஆக்கிரமித்து நின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை களைந்தெடுப்பதில் அக்கறை காட்டிய அமைதி படையினர் தம்மால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தயார்ப்படுத்தப்பட்ட மாற்றுக் குழுக்களுக்கு அயுதங்களை வழங்கி நிராயுதபாணிகளான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் அச்சுறுத்தல் தாக்குதல்களை ஊக்குவித்தனர்.

அமைதிப் படை என்ற பெயரில் வந்து ஆக்கிரமித்து நின்றவர்கள். தமிழர் பிரதேசங்களில் அமைதி நீடிக்க விரும்பவில்லை. நாம் அமைதியை பேண அனுமதிக்கவில்லை.  அமைதியை வளர்த்து மக்களுக்கு நம்பிக்கையூட்ட முயற்சிக்கவில்லை.

நோர்வே தலைமையிலான அமைதி பேச்சுக்கள் வரை , ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைப்பெற்ற பேச்சுக்களின் போதும் திறந்த மனதோடு,  அரசியல் அர்ப்பணிப்போடு ஈழத் தமிழரின் அரசியலை அணுகாத இவ் ஓர வஞ்ச அரசியலை இந்திய அரசு பரிசீலிக்க வேண்டி நிற்கிறோம்.

ஈழத்தமிழரின் அரசியல் விடுதலையை தனது பிராந்திய நலன் சார்ந்த அரசியலுக்குள் கட்டுபடுத்தி வைக்க இந்தியா படாத பாடு படுகிறது. இன்று வரை அது தான் தொடர் கதையாகிறது.

தாம் தீர்மானிக்கும் அரசியல் எல்லையைத் தாண்டி ஈழத்தமிழரின் அரசியல் வளர்ந்து விடக்கூடாது என்ற இந்தியாவின் ஆபத்தான சிந்தனை இன்றுவரை தொடர்கிறது.  இதனை முன்னுணர்ந்து தான் திலீபன் அதனை வெளிச்சம் போட்டுக்காட்டினர்.
தமிழ் மக்களை விழிப்புறச் செய்தான். புரட்சிக்கு தயாராகுமாறு அறைகூவல் விட்டு காந்திய வழியில் களம் இரங்கினான் தனது சாவின் மூலம் இந்திய அரசின் ஈழத் தமிழர் மீதான அரசியல் ராஜதந்திர பார்வையைக் கேள்விக்குட்படுத்தினான்.

திலீபன் அமைத்து தந்த அமைதி வழி போராட்டம் அகலத் திறந்திருக்கிறது இன்று வரை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது சிங்கள பேரினவாத அரசுகளின் நீதியாளர்களால் மாற்றான் தாய் மனநிலையிலையே அணுகப்படுகின்றது.

நீதி தேவதையின் குரல் வலைகள் நெரிக்கப்பட்டே வருகிறது.
தமிழர் நாம் நீதி கேட்டு தொடர்ந்தும் போராடுவோம். பௌத்த சிங்கள இனவாதிகளால் தமிழர் நிலம் வன்பறிப்பு செய்யப்பட்டுதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும் பௌத்த விகாரைகளும் எழுப்பப்படுகின்றன.
தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் போராடி சர்வதேச அரசியலை ஈர்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் எங்கும் சிங்கள படை முகாம்களின் விரிவாக்கமானது போர் ஓய்ந்த பின்னரும் நின்றபாடில்லை.
விளை நிலங்கள், கடற்பரப்பின் துறைமுகங்கள்  யாவும் படையினர் வசம் சிக்கி அரச ஆதரவுடன் தமிழீழ தாயகம் இராணுவ கொடூர சங்கிலியால் கட்டப்பட்டு, சிறைப்பட்டுக் கிடக்கிறது.

சிங்கள காவல் நிலையங்களிலும், சிங்கள காவல் அதிகாரிகளினாலும் தாயக மண்ணில் சட்டம், ஒழுங்கு, சமூக  பண்பாட்டு சீரழிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இத்தனை பத்து ஆண்டுகள் கழிந்தும் திலீபன் முன்வைத்த – “ஈழத் தமிழ் மக்களின் அமைதியான, நிரந்தரமான விடுதலைப் பெற்ற அரசியல் வாழ்வு”  பச்சையாகவே மீறப்படுகின்றன.

இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் என்ற போர்வையில் தீர்வுகளை முன்வைத்து தமிழ் மக்களை நம்பவைத்து கழுத்தறுப்புச் செய்த அந்த நாட்களை, திலீபனின் நினைவு நாட்களாக நாம் கிளர்ந்தெழுந்து அனுஸ்டிக்க வேண்டும்.

திலீபன் காட்டிய  வழியில்  நாம் முனைப்போடு போராடுவோம்.
12 நாட்கள், உண்ணாவிரத மேடையில் திலீபன் அணு அணுவாக செத்துக்கொண்டிருந்தான். அந்தக்கணத்தில் அமைதி ஒப்பந்தத்தின் போலிமுகத்திரை கிழியத் தொடங்கியது. அவன் கண் மூடும் போது,
இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் ஈழத்தமிழரின் அரசியலை ஒருபோதும் மீட்டுத் தராது என்ற அவலத்தை அன்று ஈழத் தமிழர் மனதில் ஆழப் புதைத்துவிட்டது. திலீபனின் தியாகத்தில் ஈழத் தமிழர்களின் நீதியான போராட்டம் தலைநிமிர்ந்து பயணித்தது.

மீண்டும் மீண்டும் எமது விடுதலைக்கான போராட்டம் பிராந்திய, வல்லாதிக்க அரசுகளின் அரசியல் நலன்களுக்காக முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வரப்பட்டது.
பேரழிவே, பெரும் சரிவே ஆகினும் வேரழியாத போராட்டமாக வீழ்ந்து எழுந்த இனமாக திலீபன் காட்டிய வழியில் எழுச்சி கொள்வோம்.

எமது தாயக
விடுதலைப்பயணத்தில், மாறிவரும் உலகஅரசியல் ஒழுங்கில், மேம்பட்டு வரும் அரசியல்உறவில்.
ஈழத்தமிழர் வேண்டிநிற்பதெல்லாம்

இந்திய அரசு மீதான,
ஈழத்தமிழரின் நம்பிக்கைதளர்ந்த
அரசியற்பார்வை மாற்றப்பட்டு, ,அரசியல்
நல்லுறவு துளிர்ப்பதை,
இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். வரலாற்று ரீதியாக
வளர்ந்து வந்த இந்திய ஈழத்தமிழர் நட்புறவு
புதுமலர்ச்சி காணவேண்டும்.
மலையென நம்பிவாழ்ந்த எமது மக்களின் மனங்களில் நம்பிக்கை மழைபொழியவேண்டியது இந்திய அரசின் வரலாற்றுக் கடமையாகும்.

ஈழத்தமிழர் நீட்டுகின்ற
சமாதானக் கரங்கள்,
திலீபனின் எண்ணம்போன்றே உண்மையும்,சத்தியமும்
தாங்கியவை.

நிரந்தரஅமைதியான, பாதுகாப்பான,தம்மைத்தாமே நிர்ணயிக்கும்
அரசியல் விருப்பும்,
ஆன்மீகத் தேடலும் இதுதான்.
தீலிபனுக்கான வணக்கமும்,
மாவீரர்கள் தந்துவிட்டுச்சென்ற
கடமையும் இவைதான்.