ஐக்கிய நாடுகள் சபையின் 77 வது அனைத்துலக மனித உரிமைகள் நாள் 10.12.2025இல் “எங்கள் நாளாந்த இன்றியமையாதன மனித உரிமைகள்” என்ற மையக்கருத்துடன் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு உணவு நீர் காற்று எங்கள் நாளாந்த உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாதனவாக உள்ளனவோ அவ்வாறே மனித உரிமைகளும் நாளாந்த வாழ்வுக்கு இன்றியமையாதன. ஆதலால் ஒவ்வொருவரும் மனிதஉரிமைகளை நிலைப்படுத்தும் கடமையுள்ளவர்கள் என்பதை ஐக்கியநாடுகள் சபை மக்கள் மயப்படுத்தியுள்ளது. ஆனால் 1948 இல் மனித உரிமைகள் சாசனத்தை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையே இன்றைய உலகில் நாளாந்த வாழ்வின் இன்றியமையாததாக மக்கள் மனித உரிமைகளை முன்னெடுப்பதற்கு எந்த விதமான உடன் பாதுகாப்பையும் கொடுக்க இயலாத அமைப்பாக நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணம் பெரும்பாலும் நாட்டில் உள்ள மக்களுக்கு ஆளும் ஆட்சியாளர்கள் மண்ணின் மேலான இறைமையை மறுக்கின்றபோதே மக்கள் சனநாயக வழிகளிலோ அல்லது ஆயுத எதிர்ப்பாலோ அதனை எதிர்த்துப் போராடுகின்றனர். இவர்களை ஆட்சியாளர்கள வன்முறைக்கு உள்ளாக்கியும் சிதிரவதைப்படுத்தியும், இனஅழிப்பு, இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்புக்கு உள்ளாக்கி விட்டுத் தங்கள் செயற்பாடுகளை நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்குமுரிய தேசிய பாதுகாப்புச் செயற்பாடென்றே நியாயப்படுத்தி அனைத்துலகச் சட்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். ஈழத்தமிழர்களுடன் தொடங்கப்பெற்ற இந்த இனஅழிப்பை தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என்பதை உலகமேற்கும் புதிய அரசியல் முறைமை இன்று உலக முறைமையாகவே மாறியுள்ளதை அனைவரும் அறிவர். இந்நிலையில் “எங்கள் நாளாந்த இன்றியமையாதன மனித உரிமைகள்” என்பதை எப்படி ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்துவது என்பதே இன்றுள்ள கேள்வி.
இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற மக்கள் இறைமையை நாடுகளின் இறைமை போலவே ஐக்கியநாடுகள் சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைமைகள் தோற்றுவிக்கப்பட்டாலே மனித உரிமைகள் நாளாந்த வாழ்வுக்கு இன்றியமையாதன என்பது நடைமுறைச்சாத்தியமாக முடியும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது. முறைமைகளின் வழி இயங்கும் இன்றைய உலகில் மக்கள் இறைமைக்கான தேசியங்களின் சபை அமைக்கப்பட வேண்டும் என்பது ஐக்கியநாடுகள் சபைக்குச் சீர்திருத்தம் கோருபவர்களின் நீண்டகால முன்மொழிவாக உள்ளது. ஆயினும் இதுவரை இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற உணர்வுடன் எங்களுடைய முன்னோர்களின் உயிர்த்தியாகங்கள் அர்ப்பணிப்புக்களின் பயனாகவே நாம் இந்த மண்ணில் வாழ்கின்றோம். ஆதலால் அவர்களின் உயர்ந்த நோக்குகளை நாமும் நமது அர்ப்பணிப்புக்களுடன் கூடிய வாழ்வால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மக்களை ஒருங்கு சேர வைக்கும் உள்ள உறுதியே தேசியம். இந்த உள்ள உறுதியை நடைமுறைப்படுத்த மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே அமைக்கும் உரிமையே தன்னாட்சி உரிமை. இதனால்தான் மக்கள் இறைமையை நடைமுறைப்படுத்தும் முறைமைக்கான அடிப்படைகளாக தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற மூன்றும் அமைகின்றன.
இது எமது தாயகம். இது எமது தேசியம். எமது தாயகத்தில் எமது தேசியத்தின் வழி எமது எதிர்காலத்தை பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளரச்சிகளுக்குமானதாக நிர்ணயிப்பது என்பது மக்களின் பிரிக்க இயலாத உரிமை என்பதே அரசியலில்; தன்னாட்சி உரிமைக்கான விளக்கம். தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் நாம் பிறந்த நாட்டுக்குள் காணப்படும் மற்றைய தேசியத்தவர்களுடன் இணைந்து தங்களின் பாதுகாப்புடனான அமைதிக்கும் வளரச்சிக்கும் தங்களை ஆட்சிப்படுத்த மக்கள் தங்கள் தன்னாட்சியை உள்ளக தன்னாட்சியாக மாற்றுவதால் சனநாயக அரசாங்கங்கள் அமைகின்றன. இந்த பாதுகாப்புடனான அமைதி வளர்ச்சி என்பவற்றை அமைக்கப்பட்ட அரசாங்கம் உறுதிப்படுத்தாவிட்டால் நாம் உலகின் குடிகள் என்ற வகையில் உலக மக்களையும் அவர்களின் நாடுகளையும் அவற்றின் அனைத்துலக அமைப்புக்களையும் எமக்கான தன்னாட்சியை உறுதிப்படுத்துமாறு கோருவதற்கான அனைத்துலக உரிமையே வெளியக தன்னாட்சி.
இன்று தேசிய மக்கள் சக்தி இந்த வெளியக தன்னாட்சி உரிமையை ஈழத்தமிழர்களுக்கு இல்லாது செய்வதற்கு கடந்த சிங்கள அரசாங்கங்கள் திட்டமிட்டு உருவாக்கிய ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஓரே இராச்சியம் என்ற சிங்கள பௌத்த நாடு இலங்கைத் தீவு என்பதை இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் மௌனமாக புதிய அரசியலமைப்பாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. எனவே “எங்கள் நாளாந்த இன்றியமையாதன மனித உரிமைகள்” என்பதை நடைமுறைப்படுத்த விரும்பும் ஈழத்தமிழர்கள் இந்த ஏக்கிய இராஜ்ஜியம் குறித்த கருத்தரங்குகள் மாநாடுகள் என்பவற்றை நடாத்தி தங்களின் மனித உரிமைகளைக் காக்க முயற்சிக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாக உள்ளது.
மேலும் வடமாகாணத்தில் அதிக மழை பெய்தலும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் எதிர்பாராத நேரத்தில் தாழ்வு அமுக்கம் ஏற்பட்டு மீண்டும் புயல்கள் ஏற்படலாம் எனவும் அனர்ந்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்புச் செய்துள்ளநிலையில் உலகநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தாயகத்துக்கான உதவிப்பணிகளையும் அனர்த்த முகாமைத்துவத் திட்டமிடலையும் தம்மாலான அளவுக்கு முற்திட்டமிட வேண்டிய காலமிது என்பதை முதலில் இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
இத்தகைய இயற்கை அனர்த்தங்களையும் போரையும் தொடர்ந்து எதிர்கொள்ளும் வாழ்வாக இன்றைய வாழ்வு மாறிவிட்ட சூழலில் மக்களின் குடிசார் அமைப்புக்களும் மக்களிடை கட்டமைக்கப்படும் பொருளாதார அமைப்புக்களுமே மக்களின் நாளாந்த வாழ்வை முன்னெடுக்க அரசியல் கட்சிகளை விட முக்கியத்துவம் வாய்ந்தனவாக மாறிவிட்டன. இப்படியான மக்கள் குடிசார் சமுகங்களின் ஒன்றியம் மக்கள் இடையிலுள்ள பொருளாதாரக்கட்டமைப்புக்களின் ஒன்றியம் இவை மூலம் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டாலே அறிவார்ந்த முறையில் பிரச்சினைகளை அணுக முடியும். அவ்வாறே ஐக்கிய நாடுகள் சபைக்கோ நாடுகளுக்கோ ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.
உதாரணமாக ஆற்றலுள்ள குடிசார் அமைப்புக்களின் இன்றைய தேவைக்கு சிறு உதாரணம் வருமாறு:- யாழ்ப்பாணத்தில் இருந்து சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறுதிருமுருகன் அவர்கள் மலையக மக்களது இறைமையை இழக்க வைக்கக் கூடிய கருத்தான “ எல்லாக் கோயில் காணிகளிலும் எல்லாச் சிதம்பரத்துக் காணிகளிலும் எல்லாத் தர்மக்காணிகளிலும் மலையக மக்களைக் குடியேற்றி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்க வந்தால் விவசாயம் செழிப்பாகும்” என்ற அவசர உணர்வு பூர்வமான கருத்தை வெளியிட தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் ஆதரிக்க சுமந்திரன் தமிரசுக்கட்சியின் சார்பில் பாசத்துடன் குடியே வாருங்கள் என அழைப்பு விடுத்தார். இந்நிலையில்தான் சமநீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை சக்திவேல் அவர்கள் மனிதாயத்துக்காகப் பாடுபடும் குடிசார் அமைப்பினைக் கொண்டிருப்பதால் – “இயற்கை அனர்த்தங்களை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காதிருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிப்படுத்த வடக்கு கிழக்கு மலையக மக்கள் ஒன்றுபட்டு மலையகமே மலையக மக்களின் தாயகம் அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று அறிக்கை மூலம் எதிர்வினையாற்ற முடிந்தது என்பதை இலக்கு அனைத்துலக ஈழத்தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் கவனப்படுத்த விரும்புகிறது.
இந்நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் இளையவர்கள் தளிர்கள் அமைப்பின் மூலம் மலையக மக்களின் நாளாந்த வாழ்வை கூடிய விரைவில் அவர்கள் வாழ உதவும் வகையில் திரும்ப உதவக் கூடிய அவசியமான பொருட்களை மலையகத்துக்கு அனுப்ப விரைவாகச் சேர்த்து வருவது இளைய ஈழத்தமிழர்கள் வடக்கு கிழக்கு மலையக தமிழர்களை ஒரே தமிழினத்தின் உறவுகளாவே பார்க்கின்றனர் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளதை இவ்விடத்தில் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வாறே சிங்களக் குடியேற்றங்களையும் இயற்கை அனர்த்த மறுவாழ்வு என்ற போர்வையில் ஈழத்தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டமைக்கும் ராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அனைத்துத் தமிழர்களையும் உங்கள் உங்கள் குடிசார் அமைப்புக்கள் வழி தடுத்து நிறுத்த முயற்சிக்குமாறு இலக்கு அழைக்கிறது. இவற்றை மக்கள் சார்பாக நடைமுறைப்படுத்த பொருளாதாரப்பலத்தை மக்களுக்கு அளிக்க வல்ல பலமான பொருளாதார வர்த்தக கட்டமைப்புக்களின் அவசியத்தையும் இவ்விடத்தில் இலக்கு வலியுறுத்த விரும்புகிறது.
ஆசிரியர்




