மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால், மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் நிச்சயமாக அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் வலியுறுத்தியுள்ளார்.

வடமராட்சி கிழக்கில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், கார்த்திகை மாதம் தேச விடுதலைக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருகின்ற மாதம் என்றும், கார்த்திகை 21 தொடக்கம் 27ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தாயகத்தில் ஒரு சில துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் அகன்றிருந்தாலும், கணிசமான துயிலுமில்லங்களில் இன்னும் இராணுவ முகாம்கள் இருப்பதால், ஒவ்வொரு வருடமும் மக்கள் சுதந்திரமாக நினைவேந்தல் செய்ய இயலவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, எஞ்சியிருக்கும் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கடற்றொழில் அமைச்சர் விடுத்த அறிவிப்பின்படி, துயிலுமில்லங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதை வரவேற்ற சி.வேந்தன், இதற்காக ஜனாதிபதிக்கு நன்றியையும் தெரிவித்ததோடு, இந்த உத்தரவு பேச்சளவில் இல்லாமல் செயலளவில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.