இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள் மற்றும் அவர்களைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத் தலைவர்களாக, எதிர் காலத்தை வடிக்கும் சிற்பிகளாக மாற வேண்டிய இளைஞர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் அதிகார சத்திகள், அரசியல்வாதிகள் யாவர் என்பதை இனங்காண வேண்டியது அவசியமாகும்.
அவர்களுக்குரிய தண்டனைகளும் அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகினுள் தள்ளப்படும் இளைஞர்கள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் வணிகம், பாலியல் பலாத்காரங்கள் போன்ற மோசமான பாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த ஜெயவர்தன, பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் ஆட்சிக் காலங்களில், பாதாள உலக உறுப்பினர்களும் தமது கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர்.
பல இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தேவையாளர்களாக இருந்துமுள்ளனர். சட்டவிரோத சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு கொல்லப்பட்டும், தண்டிக்கப்பட்டும் உள்ளனர். வறுமை, கல்வி அறிவின்மை, தொழிலின்மை, பிறழ்வான சூழல் போன்றவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்கள், யுவதிகள் சில அரசியல்வாதிகளின் ஏவலாளிகளாக மாறிப் பின்னர், இளவயதிலேயே பலிக் கடாக்கள் ஆகி விடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர், யுவதிகளை தவறான பாதைகளுக்கு இட்டுச்சென்று அவர்களது எதிர்காலத்தைச் சூனியமாக்கும் அதிகார சக்திகளையும், அரசியல்வாதிகளையும் சட்டப்பிடியில் இருந்து அரசாங்கம் தப்பவிடக்கூடாது என்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.