அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான அரசியல் யாப்புக்கு கோரிக்கை

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறை உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ளல் அத்தியாவசியமான ஒரு முன்தேவை என்பதையும் தமது இயக்கம் உறுதியாக நம்புவதாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளல் இலங்கைக்கு ஒரு முக்கியமான சவால் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே, இந்த முயற்சியில், அனைவரையும் உள்ளடக்கி, அனைவரினதும் பங்கேற்பை உறுதிசெய்யும் சீர்திருத்தச் செயல்முறையை உறுதி செய்வதும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சட்டமூலத்தை வரைய வேண்டும் எனவும், One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.