கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் – தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான கொள்கலன்களை விடுவிக்க புதிய யோசனை

இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பான கூட்டு யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன.

இதன்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் மற்றும் எதிர்வரும் 3 முதல் 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் என்பன இவ்வாறு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ‘தேங்கியுள்ள கொள்கலன்களை முறையாக விடுவிப்பதற்காக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசேட சோதனை கருவி கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ‘கொள்கலன்களுக்கு விரைவில் அனுமதிகளை வழங்குவதற்காக ஏற்கனவே காணப்பட்ட அனுமதி குழுவை மீண்டும் கூட்ட வேண்டும்’ என்று குறித்த 29 சங்கங்களும் யோசனை முன்வைத்துள்ளன.

அதேநேரம் ‘எதிர்வரும் 3 முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் வளாகத்தின் திறனை விரிவுப்படுத்த வேண்டும்’ என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் ‘கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கொள்கலன் வளாகங்களை அடையாளம் கண்டு இட நெருக்கடியை குறைப்பதற்கு அவற்றை பயன்படுத்த வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ‘கொழும்பு துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்’ என்றும் இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து முன்வைத்துள்ள கூட்டு யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொள்கலன்களுக்கான அனுமதி தாமதத்தை தீர்ப்பதற்காக இலங்கை சுங்கம், நேற்று (30) முதல் 4 நாட்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட கொள்கலன் அனுமதி திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதிக்குள் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதே இதன் நோக்கமாகும்.

இதேவேளை, ‘கொள்கலன் பரிசோதனை நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு மத்தியில் தவறான செயல்பாடொன்று இடம்பெற்றுள்ளது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிக்கப்பட்டிருக்கும் 80 சதவீதமான கொள்கலன்கள், அரசாங்கத்திலுள்ள உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் இடைவிடாது விடுவிக்கப்பட்டுள்ளன’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடுவிப்புகள் குறித்து சுங்கச் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகள் தற்போது கேள்வி எழுப்பி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘அவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருள் மற்றும் தரக்குறைவான மருந்துகள் இல்லை என அரசாங்கத்தால் எவ்வாறு கூற முடியும்’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.