சுதந்திர தினம் கறுப்பு நாளாக பிரகடனம் – கவனயீா்ப்புக்கும் அழைப்பு

76ஆவது சுதந்திர தினமான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையை வடக்கு, கிழக்கு முழுவதும் கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தியுள்ளன. அத்துடன், அன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவும் அழைப்பு விடுத்துள்ளன யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளின் சங்கங்கள்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு முன்னேற்றகரமான வேலைத் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் கு. துவாரகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –

“தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆட்சிகளும் ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேசு பொருளாக மாத்திரமே இருக்கின்றது.

ஆகவே, இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கங்களும் சுதந்திர நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி அன்றைய தினம் கவனவீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி 14 ஆண்டுகள் போராடி வருகிறோம். இந்தப் போராட்ட காலத்தில் இதுவரை 220இற்கும்மேற்பட்ட தாய்மாரை இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம்.

காணாமல் போனோர் பணிமனை, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு என அனைத்தும் பொய்களே. எம்மை ஏமாற்றுவதற்காகவே இவைகள். எமது பிள்ளைகளுக்கு – பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்து கின்றோம். அன்றைய தினம் வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளாா்கள்.