கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டை விசாரிக்க தீர்மானம்!

2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்படட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (15) தீர்மானித்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீடு, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் திகதியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு கொழும்பில் தங்களது பிள்ளைகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் 14 உறுப்பினர்களுக்கு எதிராக மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தின் முன் 2019ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்ததாக மனுதாரர் தரப்பு மேன்முறையீட்டில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்க சட்டமா அதிபர் முடிவு செய்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டமா அதிபரின் இந்த முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்ததாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருந்ததாலேயே, சட்டமா அதிபர் அவரை பிரதிவாதியாக பெயரிட்டு வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்ததாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், அதனையும் மீறி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்க சட்டமா அதிபர் எடுத்த முடிவு சட்டத்துக்கு முரணானது என்றும் கூறுகின்றனர்.

சட்டமா அதிபரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என்றும், சட்டமா அதிபர் எடுத்த முடிவை வலுவற்றதாக்கி உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கோருகின்றனர்.