ஐ.நா.வுக்கு முட்டுக்கட்டை: அகதிகள் குறித்த தரவுகளை சேகரிக்கும் மலேசிய அரசு

மலேசியாவில் அகதிகள் குறித்த தரவுகளை சேமிக்கும் பணியினை ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமையிடம் விட்டுவிடுமாறு அகதிகள் நல செயல்பாட்டளார்கள் மலேசிய அரசை வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் இது தொடர்பான நிபுணத்துவம் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

அகதி யார் என தீர்மானிப்பது மலேசிய அரசாக இருந்தால், அரசியல் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக மலேசியாவில் தஞ்சம் கோரியுள்ள பிற நாட்டவர்கள் நாடுகடத்தப்படும் சூழல் ஏற்படும் என North-South Initiative அமைப்பின் நிர்வாக இயக்குநர் அட்ரைன் பெரியிரா கூறியிருக்கிறார். மலேசியாவுக்கு நெருக்கமாக உள்ள நாடுகளிலிருந்து வரும் அகதிகளை நாடு கடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகள் தரவு சேமிப்பில் மலேசியாவை நம்ப முடியாது என எல்லைகளுக்கு அப்பால் அமைப்பைச் சேர்ந்த மகி ராமகிருஷ்ணண் கூறியிருக்கிறார். அகதிகளை பதிவதில் ஏற்கனவே சிறந்த பணியை ஐ.நா.அகதிகள் முகமை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பணியை மேற்கொள்ள மலேசிய அரசுக்கு என்ன நிபுணத்துவம் உள்ளது என்ற கேள்வியை மகி ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிறார். மலேசியாவில் உள்ள அகதிகளை பதிவதற்கான பணியை மலேசிய குடிவரவுத்துறை மேற்கொள்ளும் என அண்மையில் மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.  இவ்வாறு பதியப்படும் அகதிகளுக்கு மலேசிய அரசு சார்பில் அகதிகள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

1951 ஐ.நா. அகதிகள் சாசனத்தில் மலேசியா கையெழுத்திடாததால் ஐ.நா.அகதிகள் முகமையிடம் உள்ள அகதிகளின் தரவுகளை மலேசிய அரசு அணுக முடியாமல் இருக்கிறது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மலேசிய சட்டத்தின் அடிப்படையில் அகதிகள் ஆவணங்களற்ற குடியேறிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ள North-South Initiative அமைப்பின் நிர்வாக இயக்குநர் அட்ரைன் பெரியிரா அகதிகளை பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான கட்டமைப்பு தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார்.