கடலட்டைப் பண்ணை விடயத்தில் பகல் கொள்ளை – டக்ளஸுக்கு சிறிதரன் பதில்

sritharan 2 1 கடலட்டைப் பண்ணை விடயத்தில் பகல் கொள்ளை - டக்ளஸுக்கு சிறிதரன் பதில்“கடலட்டைப் பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது. அமைச்சர் சார்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். தாங்கள் நேர்மையாக நடந்தோம்; இதில் எந்த விதமான கையூட்டலும் நடக்க வில்லை என்றால் நேர்மையாக இதனை வெளிப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கடற் றொழில் அமைச்சினுடைய நேரடிக் கண்காணிப்பில் அமைச்சின் தவறான செயற்பாடுகள் ஊடாக சீன நாட்டவர்களுக்கு கடலட்டை பண்ணைகளை வழங்குகின்ற செயல் திட்டங்கள் முதன்மை பெற்ற விடயங்களாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக கிளிநொச்சியின் எல்லையாக இருக்கின்ற கெளதாரி முனை கல்முனை பகுதியிலே குய்லன் என்கிற தனியார் நிறுவனம் கடலட்டை பண்ணை அமைந்து இருக்கின்றது. இதற்கான அனுமதி பிரதேச செயலாளரிடமோ கடற் றொழில் திணைக்களத் திடமோ பெற்றுக் கொண்டதாக இல்லை.

மற்றொரு நாட்டைச் சேர்ந்த, குடியுரிமை இல்லாதவர்கள் கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்க எல்லை பரப்புக்குள் அந்த சங்கத்தினுடைய அனுமதி இல்லாமல் வலுக் கட்டாயமாக அந்த இடங்களில் பண்ணைகளை அமைத்து அந்த இடங்களைப் பிடித்தமை என்பது காலங் காலமாக பாதிக்கப் பட்டிருக்கின்ற கடற் றொழிலாளர்களை இன்னமும் பாதிக்கும்.

எமது மக்களுக்கு இது தொடர்பான புதிய தொழில் நுட்பங்கள், உபகரணங்கள் தேவை என்பது உண்மை. அதற்கு இன்னொரு நாட்டைக் கொண்டு அதனை வழங்க வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர் வந்து இந்த வளங்கள் இருக்கின்ற பிரதேசங்களில் அந்த வளத்தை சூறையாடுகின்ற வகையில் அமையக் கூடாது. நேற்று முன்தினம் கூட கடற் றொழில் அமைச்சர் கூறியிருக்கிறார் யாரும் வரலாம், பண்ணை அமைக்கலாம், யாரும் தடுக்க முடியாதென்று மமதையோடு பேசி இருக்கின்றார்.

அவருக்கு எந்த விதமான கரிசனையும் அக்கறையும் மக்கள் மீது கிடையாது. எமது பிரதேச மீனவர்களின் நலன் கருதி அந்த மக்களுக்கான பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கான உபகரணங்களை வழங்கி, அட்டைப் பண்ணைகளை அந்த மக்கள் செய்யக் கூடிய வகையில் அந்த வேலைத் திட்டத்தை செய்திருக்க முடியும். ஆனால், நேரடியாகச் சென்று கெளதாரி முனையை நாம் பார்த்த போது அரியாலையிலே இருக்கின்ற அட்டை பண்ணை குஞ்சுகளை கெளதாரி முனையில் வைத்து ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

அதற்கான ஒப்பந்தமும் கூட எழுதப் பட்டிருக்கின்றது. இரு தரப்பும் கையயாப்ப மிடாமல் சட்டத்தரணியின் கீழ் ஒப்பந்தம் செய்து வெளியிட்டுக் கொண்டதே தவிர, இதுவரை இரு தரப்புகளும் ஒப்பந்தம் செய்ய வில்லை. இது வெளிப் படையான பகல் கொள்ளை. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். தாங்கள் நேர்மையாக நடந்தோம், இதில் எந்த விதமான கையூட்டலும் நடக்க வில்லை என்றால் நேர்மையாக இதனை வெளிப் படுத்த வேண்டும்.

அரச அதிபருக்கு இது தொடர்பில் தெரியாது; பிரதேச செயலருக்கும் தெரியாது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம். அனைத்து மக்களுக்கும் சார்பான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம். இது இந்த நாட்டினுடைய, குறிப்பாக தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய இடங்களைப் பிடித்து இன்னொரு வருக்குக் கொடுப்பதாகும். மக்கள் கையேந்தி நிற்கின்ற நிலையிலே அதனை தொடர்ந்து வைத்திருப்பதற்கு அரசு முகவர்களாக இந்த அமைச்சர்களைப் பயன் படுத்துகின்றது என்பது தான் உண்மை” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 கடலட்டைப் பண்ணை விடயத்தில் பகல் கொள்ளை - டக்ளஸுக்கு சிறிதரன் பதில்

Leave a Reply