முல்லைத்தீவிற்கு அருகே “மொன்தா சூறாவளி” – மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக “மொன்தா” சூறாவளியானது  முல்லைத்தீவில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பிலேயே  இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது  மொன்தா சூறாவளி மேலும்  தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடக்கு – வடமேற்குத் திசையை அண்மித்து நகர்ந்து செல்வதுடன் இன்று மாலை அல்லது இரவு வேளையில் ஆந்திரப் பிரதேசத்தின் கரையை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும்  அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். அத்துடன் மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்று மற்றும் மழையால்  ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.