ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திர பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கியூபா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், மற்றும் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்புஇன்று செவ்வாய்யக்கிழமை (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens) இடையிலான சந்திப்பு இன்று கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும், இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
அதேபோல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ளும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் பொருளாதார வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்தையும் அவுஸ்திரேலிய தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் மேலும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் சீன தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.
இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
அத்துடன்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பும் இடம்பெற்றது,
இதன் போது,ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவிற் (Santosh Jha) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்திய தூதுவர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர், அண்டைய சகோதர நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான மற்றும் நிலையான நட்பைப் பேணி முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஊழலுக்கு எதிராக திறம்பட போராடுவதற்கு அரசாங்க கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திட்டத்தையும் பாராட்டினார்.
மேலும், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன் போது, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமென உறுதியளித்த தூதுவர், கல்வித்துறை உறவுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி கிட்டுமென உறுதியளித்தார்.