உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித் பங்கேற்றமை தொடர்பில் விமர்சனம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தனிப்பட்ட ஒருவருடைய கருத்து மட்டுமே புத்தக வடிவில் வெளியிடப்பட்டதே ஒழிய, அது பொதுவான ஒரு கருத்தல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்தார்.

உண்மைகளை கண்டறிவது அவசியம் என்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்திருக்கவே கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் இந்த நிலைமை ஏற்படாதவாறு கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எழுதிய குறித்த புத்தகம் அல்லது அதன் உள்ளடக்கங்கள் ஆராயப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கம்மன்பிலவின் புத்தக வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டபோதிலும், புத்தகத்தில் உள்ள விடயங்கள் அனைத்தையும் அவர் ஏற்றுக்கொண்டதாகக் கருதமுடியாது.

தனி ஒருவரால் எழுதப்பட்ட புத்தகத்தை பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி குறித்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட நூல் வெளியீட்டு விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவரின் பங்கேற்பு குறித்து விமர்சித்துள்ளார்.
“அவர் அங்கு இருந்திருக்க முடியாது. அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக இருக்கலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் அவர் அங்கே வைக்கப்பட்டிருக்கலாம்” என நளின் பண்டார கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரான் ஹாசிமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என உதய கம்மன்பில தனது நூலில் குறிப்பிட்டுள்ளதை நளின் பண்டார நிராகரித்துள்ளார்.

உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கே இவ்வாறான நூல்கள் வெளியிடப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் தாம் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், இந்த தாக்குதலுக்கு பின்னால் பாரிய மற்றும் சிறிய அளவிலான சூத்திரதாரிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

நாட்டில் இனவாதத்தைத் தூண்டிய நபர்களே இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி’ எனும் புத்தகத்திலுள்ள கருத்துக்களுடன் தமது கட்சி உடன்படவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்தக வெளியீடு என்ற அடிப்படையிலேயே சஜித் பிரேமதாச குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.