ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது, ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டில் உள்ள சில நோயாளிகளிடையே கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் இவ்வாறான கொவிட் -19 திரிபுகள் தொடர்பாக வீண அச்சத்தை ஏற்படுத்தி கொள்ளத் தேவையில்லை. அதிக ஆபத்துள்ள பிரிவினர் என சுட்டிக்காட்டப்படும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் நோய்குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதுடன் கொவிட்-19 பரவலின் போது பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
இந்நாட்களில் சனநெரிசலான பகுதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் காலத்துக்கு ஏற்ற அவ்வப்போது பரவுகின்றன. இருப்பினும், இதனை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.