இலங்கையில் அனர்த்தத்திற்கு உள்ளானவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் கொலன்னாவ, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தில் சிக்கிய பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் உலங்கு வானூர்திகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. இந்தநிலையில் பாகிஸ்தான் மீட்புக் குழுவினர், மீட்பு மற்றும் உலர் உணவு விநியோக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சீன அரசாங்கம் இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
சீன செஞ்சிலுவை சங்கம் அவசர நிதி உதவியாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் தொகையை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கியதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டு சீன சங்கம் ஆகியன இணைந்து நன்கொடை திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
இந்த இரு அமைப்புகளும் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 மில்லியன் இலங்கை ரூபாயைத் திரட்டியுள்ளன. இதேவேளை, பல நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கி இந்தியாவுக்குப் பயணிக்க முடியாமல் தவித்த சுமார் 400 இந்தியர்கள், வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றி வந்த 2 விமானங்கள் மூலம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை, இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் சுமார் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விமானத்தில், BHISHM Cubes எனப்படும் நிவாரண உபகரணங்களுடன், களத்தில் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்குவதற்காக மருத்துவக் குழுவினரும் வருகைத்தந்துள்ளனர்.



