கொரோனா கட்டுப்பாட்டில்; நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை என்கிறார் சவேந்திர சில்வா

258 Views

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமையினால் நாட்டை மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என கொரோனா தவிர்ப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சகலரும் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு நிலைமை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்படுவார்களாயின் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் புலனாய்வு பிரிவினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் சில பகுதிகளில் எதிர்காலத்தில் மேலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட வாய்ப்புகள் உள்ளன. அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிடுகையில், இந்நாட்டில் கொரோனா தொற்று சமூகத்தில் பெரு வீழ்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த பல வாரங்களாக சமூகத்தில் எவரும் உள்ளாகாத சூழலில் தான் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இத்தொற்று பதிவானது. என்றாலும் அத்தொற்று சமூகத்தொற்றாவதைத் தவிர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடற்படையினருக்கு ஏற்பட்ட இந்நோய்த் தொற்றைவிட விரைவாக தற்போது ஏற்பட்டுள்ள இத்தொற்றைக் கட்டுப்பாடுக்குள் கொண்டுவர முடியும்.

கடற்படையினரிடையே ஏற்பட்ட தொற்றைப்போல் கந்தக்காட்டில் ஏற்பட்டுள்ள தொற்று மாதக் கணக்கில் நீடிக்காது. அதனைக் குருகிய காலப்பகுதிக்குள் கட்டுப்படுத்திவிடலாம்.

என்றாலும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடைய மேலும் பல நோய்த்தொற்றாளர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடுத்த சில தினங்களில் இனங்காணப்பட முடியும்.

தற்போது- இந்நோய்த்தொற்றுக்கு எதிராக உலகில் உள்ள சிறந்த மற்றும் பலம் மிக்க ஆயுதம் தனிமைப்படுத்தலே எனச் சுட்டிக்காட்டிய டொக்டர் ஜாசிங்க, தேவைப்படும் அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான பின்னர் அவர்களது வீடுகளில் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள கொரோனா தொற்று சந்தேக நபர்கள் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது பி. சி. ஆர். பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அங்கிருந்து வெளியே அனுப்பப்படுவர். இந்நிலையில் அனைத்து மக்களும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு வெளியிடும் சகல சுகாதார வழிகாட்டல்களின்படி நடந்துகொள்வது கட்டாயமாகும்.

இந்நிலையில் வீட்டிலிருந்து எப்போது வெளியில் சென்றாலும் முகக்கவசம் அணிவதுடன், மற்றைய நபரிடமிருந்து எப்போதுமே ஒரு மீற்றர் இடைவெளியை பேண வேண்டும். அத்தடன் 30 செக்கன்களுக்கு சவர்க்காரம் போட்டு கைகளை நன்று கழுவுவதுடன், சவர்க்காரம் இல்லாதவிடத்து ‘சனிடைஸர்’ மூலம் கைகளை ஈரமாக்கிக்கொள்ளும் அடிப்படை சுகாதார வழிகாட்டலை அனைவரும் அனைத்து நேரங்களிலும் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply