மியன்மாரில் சர்ச்சைக்குரிய இணைய மோசடி மையம் முற்றுகை

இலங்கையர் உட்பட்டவர்களுக்குத் தொழில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களை இணையக் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இணைய மோசடி மையங்களில் ஒன்றை மியான்மார் இராணுவம் மூடியுள்ளது.

தாய்லாந்து எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்த மையத்தை இராணுவம் மூடியபோது, அங்கிருந்து 2,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பல ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய முனையங்களையும் இராணுவம் கைப்பற்றியுள்ளது.

உலகம் முழுவதும் மக்களை ஏமாற்றுவதற்குப் பொறுப்பான சைபர்ஸ்கேம் (Cyberscam) நடவடிக்கைகளை நடத்துவதில் மியான்மார் முன்னிலை வகிக்கிறது. பொதுவாகப் பாதிக்கப்பட்டவர்களை வசப்படுத்தல் மற்றும் போலி முதலீட்டு விளம்பரங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் இந்த மையம் ஈடுபட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மையம், பிற நாடுகளிலிருந்து தொழிலாளர்களைத் தவறான உறுதி மொழிகளின் கீழ் வேலைக்கு அமர்த்துவதற்கும், பின்னர் அவர்களைச் சிறைபிடித்துக் குற்றச் செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
சம்பவத்தின்போது, 2,198 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டபோதும், அவர்களின் தேசியம் இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை.