தொடரும் சவால்கள்-துரைசாமி நடராஜா          

128 Views

நாட்டின் சமகால நெருக்கீடுகள் அதிகரித்து வரும் நிலையில் உணவுப் பாதுகாப்பு கருதி உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.அத்தோடு சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரின் அபிவிருத்தி கருதி உலக நாடுகள் வழங்கி வரும்  உதவிகளும் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றன.

எவ்வாறெனினும் இத்தகைய உதவிகள் உரிய பயனாளிகளை சென்றடைவதில் பல்வேறு சவால்கள் மேலோங்கி வரும் நிலையில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கீடுகளுக்கும் இதுவரை உரிய தீர்வு கிடைத்ததாக இல்லை.

அம்மக்கள் அரை வயிறுக்கும் கால் வயிறுக்கும் போராடும் நிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.இதிலிருந்தும் அம்மக்களை மீட்டெடுத்து பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் திராணியற்றவர்களாக, கையாலாகாதவர்களாக ஊடக அறிக்கைகளில் உயிர்வாழ்வது வெட்கக்கேடான செயலாகும்.

இலங்கை இப்போது மரண வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஆட்சியாளர்களின் பிற்போக்கான செயற்பாடுகள் நாட்டை அதளபாதாளத்தில் தள்ளி இருக்கின்றன.”புத்திசாலிகள் அரசியலுக்கு செல்லாவிட்டால் முட்டாள்கள் நம்மை ஆள நேரிடும்” என்பது கற்றறிவாளர்களின் கருத்தாகவுள்ளது.

இதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்கள் இப்போது நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர்.அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற தீர்மானங்கள், எல்லாம் தெரியும் என்ற மமதை, அதிகார தோரணை இவையெல்லாம் இணைந்து நாட்டு மக்களை கோவணத்தோடு வீதிக்கு இறக்கியிருக்கின்றது.

இலங்கை மக்களின் அடுத்த வேளை உணவு இப்போது கேள்விக்குறியாகிவரும் நிலையில் அரசியல்வாதிகளின் “பைலாக்களுக்கு” குறைவில்லை.மக்களுக்கு சேவையாற்றும் தோரணையில் அரசியல் களம் புகுந்தவர்கள் நாட்டைச் சுரண்டி ஏப்பமிட்ட வரலாறு இனியும் தொடரக்கூடாது என்ற இளைஞர்களின் தாகம் காலிமுகத்திடலில் எதிரொலித்த நிலையில் அரசியல் பெருச்சாளிகள் அசைந்து கொடுக்காது இன்னும் எதனைச் சுருட்டலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.இதனிடையே ஜனநாயக ரீதியான போராட்டங்களை கொச்சைப்படுத்தி இளைஞர்களை ஓரங்கட்டும் முயற்சிகளும் இல்லாமலில்லை.

தொழிற்றுறை‌ பாதிப்பு

இலங்கை இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றது.இலங்கையின் சுற்றுலாத்துறை, ஏற்றுமதி வருமானம் எனப்பலவும் வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் பொருளாதார வீழ்ச்சிக்கு அது உந்துசக்தியாகியுள்ளது.இதனடிப்படையில் இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 16 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.இதனிடையே  உலக நாடுகள், ஊழல் மிக்க அரசியல்வாதிகள் ஆட்சியில்  இருக்கும்வரை நாட்டுக்கு உதவப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன.

இதற்கும் மத்தியில் மக்கள் மீது  ஈரமுள்ள சில நாடுகள் தன்னாலான உச்சகட்ட உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருவதும் பாராட்டத்தக்கதேயாகும்.இலங்கையின் சமகால நெருக்கீடுகள் பல துறையினரினதும் தொழிற்றுறைக்கு ஆப்பு வைத்துள்ளது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்குகின்றனர்.வருமான கீழ்நிலைக்கு மத்தியில் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.இந்நிலையில்  சுமார் மூன்று மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவிகள் தேவைப்படுவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள வறிய‌ மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவசியமான உணவுசார் உதவிகளை வழங்குவதற்கு தேவையான நிதியை ” உணவைப் பகிருங்கள்” திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு உலக உணவுத் திட்டம் அண்மையில் நன்கொடையாளர்களிடம்  கோரிக்கை விடுத்திருந்தமையும் தெரிந்ததேயாகும்.இலங்கையின் பொருளாதார நெருக்கீடுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகையில்  இதனைக் கையாளுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள், பொருளாதார மற்றும் மனித உரிமைகள்சார் நெருக்கடிகள் மேலும் தீவிரமடைவதற்கு வழிவகுக்கக்கூடுமென்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.மேலும் பொருளாதார நெருக்கடி காணப்பட்டாலும்  இலங்கை ஏற்கனவே இணங்கியிருக்கும் சர்வதேச கடப்பாடுகளின் பிரகாரம்  மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதும், அவற்றை பாதுகாப்பதும் இன்றியமையாததாகும் என்றும் மன்னிப்புச்சபை தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் ஐந்து மில்லியன் மக்கள் அதாவது 22 வீதத்தினர் உணவுப் பாதுக்காப்பின்மை அல்லது உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.இலங்கையில் 66 வீதமானோர் குறைந்தளவு உணவையே பெற்றுக் கொள்வதாக கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று வலியுறுத்துகின்றது.

மேலும் குறைந்த விலையுடைய பொருட்களை கொள்வனவு செய்தல், குறைந்த போஷணையுடைய உணவை உட்கொள்ளுபவர்கள் 95 வீதமாகவும், வரையறுக்கப்பட்ட  அளவிலான உணவை உட்கொள்ளுபவர்கள் 83 வீதமாகவுமுள்ளனர்.இதேவேளை இலங்கையின் உணவுப் பணவீக்கம் 57 ஆக உயர்வடைந்துள்ளதையும் ஆய்வு புலப்படுத்துகின்றது.இதேவேளை அவுஸ்திரேலியா, இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகள் உணவுப் பாதுகாப்பு கருதி உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இதனடிப்படையில் அவுஸ்திரேலியா 22 மில்லியன் டொலர்களை அண்மையில் இலங்கைக்கு வழங்கியிருந்தது.இதேவேளை எட்டு இலட்சம் இலங்கை சிறுவர்களின் உணவுப் பாதுகாப்பிற்காகவும், 27,000 கர்ப்பிணிகள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதியும் மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  ஜீ – 7 மாநாட்டில் உறுதியளித்திருந்தார்.இந்தியப்  பிரதமர் மோடியும் இது குறித்த தனது கரிசனையை  வெளிப்படுத்தி இருந்தார்.

மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள் என்று பல விடயங்கள் தொடர்பிலும் சர்வதேசத்தின் வக்கிரப்பார்வை இலங்கை மீது படித்திருந்தாலும் மனிதாபிமான ரீதியிலான உதவிகளை அந்நாடுகள் இலங்கைக்குப் பெற்றுக் கொடுக்கத் தவறவில்லை.இவ்வாறாக இந்தியா இலங்கைக்கு வழங்கும் உதவிகளைக்கூட சிலர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர்.இந்தியா இலங்கையை ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்துவதற்கு இத்தகைய உதவிகள் தூண்டிலாகும் என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.எனினும் இது நம்பகத்தன்மையற்ற பிற்போக்கான ஒரு வெளிப்பாடாகுமென்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அடிப்படைத் தேவைகளுள்  உணவுத்தேவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றபோதும் இலங்கையில் பின்தங்கிய மக்களின் உணவுத் தேவை எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியதாகும். உணவுத் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எவரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே தனது கொள்கையாகும் என்று பிரதமர் ரணில் உணவுப் பாதுகாப்புக் குழு வினருடனான கலந்துரையாடலின்போது அண்மையில் தெரிவித்திருந்தார்.எனினும் கவர்ச்சியான கருத்து வெளிப்பாடுகள் காணப்படுகின்றனவே தவிர அரசாங்கத்திடம்  உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன என்பது வருந்தத்தக்கதாகும்.

கைவிடப்பட்ட நிலங்களை பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துதல், வீட்டுத்தோட்ட அபிவிருத்தி என்றெல்லாம் அரசாங்கம் பேசிவருகின்றபோதும் இவ்விடயம் தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புக்கள் இல்லாமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்க விளைவுகள்

பெருந்தோட்ட மக்களின் உணவுத் தேவை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.கொரோனாவை பின்தொடர்ந்த காரணிகளால் குடும்பங்களில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ,ஊதியப் பற்றாக்குறை, மாற்றுத் தொழில்களுக்கான வாய்ப்பின்மை போன்ற பல காரணிகளும்  பெருந்தோட்ட மக்களின் உணவு உள்ளிட்ட பல தேவைகளிலும் முடக்கல் நிலையினை ஏற்படுத்தி வருகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.கொரோனா காலத்திலும் கூட நாட்டிற்குத் தேவையான பெருமளவு அந்நியச் செலாவணியை  ஈட்டிக் கொடுத்த பெருமை பெருந்தோட்டத் தொழிலாளர்களைச் சார்ந்ததாகும். எனினும் உலகச். சந்தையில் தேயிலைக்கான விலை அதிகரிக்கின்றபோதும் இதன் ஊடான சாதக விளைவுகள் தொழிலாளர்களைச் சென்றடைவதில்லை.கம்பனியினரின் தொடர்ச்சியான பஞ்சப்பாட்டுக்கு மத்தியில் தொழிலாளர்களின் உரிமைகளும், பொருளாதார மழுங்கடிப்புகளும் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் தொழிலாளர்களின் உணவு உள்ளிட்ட பல தேவைகளிலும் தாக்க விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன.

நாட்டின் உணவுத் தட்டுப்பாடு கர்ப்பிணிகள், சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்திவரும் நிலையில் இதன் தாக்க விளைவுகள் மலையகத்தில் தெளிவாகவே வெளித்தெரிகின்றன.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களின் போஷாக்கு அபிவிருத்தி கருதி இலவசமாக வழங்கப்பட்ட” திரிபோஷ ” சத்துணவு வழங்கலும் தற்போது சவாலுக்கு உள்ளாகியுள்ளது.டொலர் பிரச்சினை காரணமாக சோள இறக்குமதியும் இப்போது பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதோடு உரம், மருந்துகள் உள்ளிட்ட பிரச்சினையால் உள்ளூர் சோள உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது.570 மெற்றிக் தொன் சோளத்தை மட்டுமே தற்போது உற்பத்தி செய்ய இயலுமான நிலையில் இது ஒரு வாரத்துக்கு தேவையான  “திரிபோஷ” வையே பெற்றுக் கொள்ள போதுமானதாகும்.

இத்தகைய நிலைமைகளால் பெருந்தோட்ட கர்ப்பிணிப் பெண்கள் அதிகரித்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதோடு இவர்களின் தொழில் நிலைமைகளிலும் இது தாக்கம் செலுத்துவதாகவுள்ளது.ஜனாதிபதியின் உரம் குறித்த தீர்மானம்  விவசாயத்துறையையும் நாட்டையும் அதளபாதாளத்தில் தள்ளியுள்ளது. அண்மைய தகவலின்படி இலங்கையில் 53 சிறுவர்களில் 11 பேருக்கு மந்த போஷணை இருப்பதாக தெரியவருகின்றது.

இவர்களில் நான்கு பேருக்கு அதிகரித்த மந்தபோஷணை நிலை காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.இந்தவகையில் பெருந்தோட்ட சிறுவர்களிடையே ஏற்கனவே மந்தபோஷணை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இது இப்போது மேலும் அதிகமாகி இருக்கின்றது.இதனால் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களை  மாணவர்கள் எதிர்கொண்டுள்ளதோடு கல்வித்துறையில் கிரகித்தல், அடைவு மட்ட வீழ்ச்சி, பெறுபேறுகளில் பாதிப்பு போன்ற பின்னடைவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே பெருந்தோட்ட மக்களிடையே பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி சகலதுறைசார் அபிவிருத்திக்கும் வலுசேர்க்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள் இது தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு அரசாங்கத்தை வலியுறுத்தி மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வருதல் வேண்டும்.இல்லையேல் மலையக சமூகம் மேலும் பலவீனமடைவதை தவிர்க்க முடியாது.

Leave a Reply