எதிர்வரும் 22ஆம் திகதி ஜனாதிபதி விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவருமான தில்லைநாதன் சதானந்தன் தெரிவித்துள்ளார்.
நிறுத்திவைக்கப்பட்டுள்ள பரீட்சைகளையும் நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தொடர்ந்து கருத்து அவர் தெரிவிக்கையில், நாங்கள் தொழில்நுட்ப தொழில் வல்லுநர் சம்மேளனமாக இப்போராட்டத்தை ஆரம்பித்தோம். இத்தொழிற்சங்கத்தில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றன.
அதற்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை எங்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாங்கள் அடையாள வேலைநிறுத்தம், ஊடகங்களூடாக கருத்துத் தெரிவித்தல் போன்ற பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடந்த மார்ச் 9ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
வரி செலுத்துவது எமது அனைவரினதும் தார்மீகக் கடமையாகும். இந்நிலையில் நாம் தொடர்ச்சியாக எமது மாதாந்தச் சம்பளத்தினூடாக வரியைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறோம். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலுக்கு நாங்களே காரணம் என்ற குற்றச் சாட்டு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது நாங்கள் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகின்ற 22ஆம் திகதி தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கமாகிய எம்மைச் சுமுகமான பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குச் செல்வது சம்பந்தமாக ஆராயும் பொருட்டு, இன்று கூடிப் பேசினோம். இதன் பிரகாரம் எங்களுடைய தொடர்ச்சியான போராட்டத்தில் எந்தவித. மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்பே முடிவை எடுப்போம் என்றார்.