பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம் அவசியம்; மனோ கணேசன் எம்பி

பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம்

பயங்கரவாத தடை சட்ட முழு நீக்கம்: பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம் தான். ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.

அதேவேளை, “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டு தூதர்களை அழைத்து, பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை மற்றும் இதுபற்றிய வர்த்தமானி வெளியாகியுள்ளமை தொடர்புகளில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது

என்னை பொறுத்தவரையில், திருத்தம் அல்ல, இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது என நினைக்கிறேன். அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும். அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்த சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம். ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல.

ஆனால், இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது.

ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை. இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்.

எனினும், அரசுக்கு அரசு இச்சட்டம் அமுல் செய்வதில் வேறுபாடு உண்டு. எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாக தெரிந்தது. எமது ஆட்சியின் போது இந்த சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. எமது அரசு காலத்தில், இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் நான், தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக கலந்துக்கொண்டுள்ளேன்.

1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.

ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.

“உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம்.

Tamil News