மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல் நிலையத்தில் முறைபாடு

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்குமாறு ஊர்காவற்றுறை  காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலர் இருவேறு முறைப்பாடுகளை இன்று (04) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.
35 வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இராணுவத்தால் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 09 04 at 18.15.06 2824977f மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல் நிலையத்தில் முறைபாடு

கொல்லப்பட்டவர்களில் 45க்கும் அதிகமான சடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன.  அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் சடலங்கள் இருக்கின்றன. குறித்த கிணற்றை அகழ்ந்து சடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பாக கடந்த மாதம் 20ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.