ஹர்த்தாலையிட்டு மட்டு நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் முதல்வருக்கு எதிராக இன்று (18) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி ஆட்சி செய்யும் மாநகரசபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து நேற்று (18) காலையில் கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, செங்கலடி, ஓட்டுமாவடி, மற்றும் மட்டக்களப்பு நகரை தவிர ஏனைய பிரதேசங்களில் வழமைபோல வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன.
அத்துடன் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பாடசாலைகள் இயங்கின. மட்டக்களப்பு நகரில் உணவகங்களை தவிர எனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் முற்பகல் 10 மணிக்கு திறப்பது வழைமையானது.
இந்த நிலையில் நகரில் காலையில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போது மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் சென்று அவற்றை மூடுமாறு தெரிவித்தார். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் சென்று வர்த்தக நிலையங்களை மூடவேண்டாம் திறக்குமாறு தெரிவித்தனர்.
இந்தநிலையில் இரு கட்சிகளும் பரஸ்பரம் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டன. இதனையடுத்து மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சென்று வர்த்தக நிலையங்களை மூடுமாறு தெரிவித்த போது அங்கு வர்த்தகர்களுக்கும் முதல்வருக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
வர்த்தகர்கள் மூடுவதா? திறப்பதா? என என்ன செய்வது என தெரியாது திண்டாடிக் கொண்டிருந்தனர்.
எனினும் 10 மணிக்கு பின்னர் சில வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறந்தனர்.
இந்தநிலையில் மாநகரசபை முதல்வர் அரச வாகனத்தை ஹர்த்தாலுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தி வர்த்தக நிலையங்களை மூடுமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் அனுமதி பத்திரம் நிறுத்தப்படும் என வர்த்தகர்களை மிரட்டி அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாநகர சபையின் தேசிய மக்கள் கத்தியின் 5 உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் ஈரோஸ் கட்சியின் இரா.பிரபாகரன் வர்த்தகர்களை மிரட்டி வர்த்தக நிலையங்களை முதல்வர் பூட்டியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து மாநகர சபை முதல்வர் பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.