டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இழப்பீட்டிற்கான காசோலைகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
டித்வா புயலின் சீற்றத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கைகொடுக்கும் நோக்கில், இரண்டாம் கட்ட இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயதலால் ரத்னசேகர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய நிகழ்வில், 281 கால்நடை வளர்ப்பாளர்களுக்கு 232 மில்லியன் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய கொடுப்பனவுடன் சேர்த்து, மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 558 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிண்ணியா, தம்பலாகமம், பதவிசிரியபுர, திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய் மற்றும் மொரவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இந்த இழப்பீடுகளைப் பெற்றுக்கொண்டனர்.



